ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 வெளியான கொஞ்ச நேரத்திலேயே ஆப்பிள் பங்குகள் பயங்கரமாகச் சரிந்தது. இதனால் ஆப்பிள் நிறுவனம் சுமார் 5.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் உடன் ஐபோன் 17 ஏர் என மொத்தம் 4 மாடல்கள் வெளியிடப்பட்டன. ஐபோனுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கும் சூழலில், அவர்கள் இந்த புதிய மாடல்களை கொண்டாடித் தீர்த்து வருகின்றன.
₹5.34 லட்சம் கோடி போச்சு ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐபோன் வெளியீட்டு விழா முடிந்த நிமிடங்களிலேயே ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மளமளவெனச் சரிந்தது. இதனால் ஆப்பிள் நிறுவனம் சுமார் ₹5.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்தது. இதன் மூலம் அதன் சந்தை மதிப்பு 3.53 டிரில்லியன் டாலரில் இருந்து சுமார் 3.46 டிரில்லியன் டாலராகக் குறைந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்து, 226 டாலரை எட்டியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் பங்குகளின் விலை 6.5% மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தான் உலகெங்கும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு அப்படி இருந்தாலும் ஏன் ஆப்பிள் பங்குகள் மதிப்பு சரிந்தது என்ற கேள்வி பலருக்கும் வரும்.
இதற்கு சில முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆப்பிள் தனது ஐபோன் வெளியீட்டு விழாவுக்கு ஓவர்பில்டப் கொடுத்து வைத்திருந்தது. ஐபோன் 17 நல்ல செல்போன் தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பில்டப்களை பூர்த்தி செய்யும் அளவுக்கான வசதிகள் இல்லை. முந்தைய மாடல்களில் இருந்து ஓரளவுக்கு நல்ல அப்டேட்களை கொண்டிருந்தாலும் மிக பெரிய புதுமை என எதுவும் இல்லை.
அதாவது ஐபோன் 17ல் பெரும்பாலும் சிறிய மேம்பாடுகளை மட்டுமே இருந்துள்ளது. புதிய புரட்சிகரமான அம்சங்கள் இல்லை. இதனால் மக்கள் புதிய ஐபோன் வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள் என முதலீட்டாளர்கள் கருதியுள்ளனர். குறிப்பாக ஏஐ பிரிவில் மற்ற செல்போன் நிறுவனங்கள் பல புதுமைகளை கொண்டு வருகிறது. ஆனால், ஆப்பிள் ஏஐ என்ற வார்த்தையைக் கூட பெரியளவில் பயன்படுத்தவில்லை. ஏஐ-ல் அது பின்தங்கி இருப்பதையே இது காட்டுகிறது. இதுவும் பங்குகள் சரிய ஒரு காரணமாகும்.
அதேநேரம் வழக்கமாக எப்போதுமே ஐபோன் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு ஆப்பிள் பங்குகள் விலை குறையவே செய்துள்ளது. செல்போன் உலகிலேயே புதிய புரட்சியை ஏற்படுத்திய ஐபோன் 1 வெளியீட்டின் போதும் கூட ஆப்பிள் பங்குகள் ஏறவில்லை.