ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 85-வது இடத்தைப் பெற்றிருந்த இந்தியா, தற்போது 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இனி உலகளவில் 50 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் அல்லது விசா-ஆன்-அரைவல் வசதியைப் பெற முடியும்.
இதில் மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து போன்ற ஆசியாவின் பிரபலமான சுற்றுலா நாடுகளும் அடங்கும். இதேபோல் இலங்கை, மக்காவ், மியான்மர் போன்ற பிற நாடுகளுக்கு சென்று அங்கு விசாவை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.
மரியாதைக்குரிய அளவுகோலாகக் கருதப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, முன்கூட்டியே விசாவுக்கு விண்ணப்பிக்காமல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எத்தனை நாடுகளுக்குள் நுழைய முடியும் என்பதன் அடிப்படையில் பாஸ்போர்ட்களை தரவரிசைப்படுத்துவது குறிப்பிட்டத்தக்கது.
இந்த வரிசையில் சிங்கப்பூர் நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்த நாட்டு குடிமக்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். ஜப்பான், தென்கொரிய நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள் தலா 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். ஜப்பான், தென் கொரிய நாடுகள் இந்தப் பட்டியலில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 8-வது இடத்தையும், அமெரிக்கா 10-வது இடத்தையும், சீனா 60-வது இடத்தையும் இந்தப் பட்டியலில் பெற்றுள்ளது.