ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீர்ர்களை நேற்று நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி. அந்த 4 வீர்ர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
க்ரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்
அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு பெருமை தரும் விஷயம். 1982-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி சென்னையில் பிறந்த அஜித் கிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தவர். விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
அஜித் கிருஷ்ணன் 21 ஜூன் 2003 அன்று இந்திய விமானப்படையின் போர்ப் பிரிவில் நியமிக்கப்பட்டார். பயிற்சி விமானிகளுக்கான ஆலோசகராகவும் உள்ளார். அதோடு இந்திய விமானப்படையின் புதிய விமானத்திற்கான சோதனை பைலட்டாகவும் இருக்கிறார்.
2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் பறந்த அனுபவம் கொண்ட அஜித் கிருஷ்ணனுக்கு சுகோய்-30, எம்.கே.ஐ., மிக்-21, மிக்-29, ஜேகுவார், டார்னியர், ஏ.என்.-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை இயக்கிய அனுபவம் இருக்கிறது.
க்ரூப் கேப்டன் பாலகிருஷ்ணன் நாயர்
கேரளாவில் உள்ள திருவாழியாடு என்ற ஊரில் 1976-ம் ஆண்டு பிறந்தவர் பாலகிருஷ்ணன் நாயர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் முதலில் படித்த அவர், விமானப்படை அகாடமியில் ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ கவுரவத்தை பெற்றிருக்கிறார். 3 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் இவருக்கு உள்ளது.
இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கு அனுப்ப்ப்படும் வீர்ர்களில் ஒருவராக பாலகிருஷ்ணனை பிரதமர் மோடி அறிவித்த அதே நாளில், தான் பாலகிருஷ்ணனின் மனைவி என்று தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருக்கிறார் பிரபல மலையாள நடிகை லேனா. இவர்களின் திருமணம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது.
க்ரூப் கேப்டன் அங்கட் பிரதாப்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரக்யராஜில் 1982-ம் ஆண்டு பிறந்தவர் அங்கட் பிரதாப். தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்த இவர், 2004-ம் ஆண்டுமுதல் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகிறார். விமானப் படையில் இளம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் அங்கத் பிரதாப்புக்கு 2 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் இருக்கிறது.
விங் கமாண்டர் ஷுபான்ஷு சுக்லா
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் 1985-ம் ஆண்டு பிறந்தவர் ஷுபான்ஷு சுக்லா. தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்த இவர், 2006-ம் ஆண்டு விமானப் படையில் இணைந்துள்ளார். 2 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் இவருக்கு உள்ளது.