நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய மண்ணில் நமது அணி எடுத்த மிக குறைவான ஸ்கோர் உள்ளிட்ட பல மோசமான சாதனைகள் இந்த டெஸ்ட் போட்டியில் படைக்கப்பட்டன.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று (புதன்கிழமை) தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் போட்டி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்கியது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். பெங்களூருவில் ஏற்கெனவே மழை பெய்திருந்ததாலும், காலையில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததாலும், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அதை உணராமல் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது பெரும் தவறாகப் போய்விட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை பெய்வதுபோல், ஆடுகளத்தின் ஈரத்தன்மையால் விக்கெட் மழை பெய்தது. 32.1 ஓவர்களிலேயே இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சொந்த மண்ணில் இந்திய அணி எடுத்த மிக்க்குறைந்த ரன்கள் என்ற சாதனை இதன்மூலம் வரலாற்றில் பதிவானது. அத்துடன் டெஸ்ட் தொடரில் இந்தியா எடுத்த 3-வது மிக்ககுறைந்த ரன்கள் என்ற சாதனையும் பெங்களூருவில் படைக்கப்பட்டது.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால் (13 ரன்கள்), ரிஷப் பந்த் (20 ரன்கள்) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களைக் கடந்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆவுட் ஆனார்கள். குறிப்பாக விராட் கோலி, சர்பிராஸ் கான், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். இந்திய பேட்ஸ்மேகள் 5 பேர் 0 ரன்னில் ஆட்டம் இழப்பது இது 6-வது முறையாகும்.
விராட் கோலி கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் 0 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு அவர் இப்போதுதான் ரன்கள் எதையும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார். நியூஸிலாந்து அணித் தரப்பில் மேட் ஹென்றி 5, வில்லியம் ஓ’ரூர்கி 4 மற்றும் டிம் சவுதி 1 விக்கெட் வீழ்த்தினர்.