வேலை செய்ய சிறந்த இடம் தொடர்பான பட்டியலில், 48 பெரிய நிறுவனங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘கிரேட் பிளேசஸ் டூ வொர்க்’ என்ற நிறுவனம் சர்வதேச அளவில் நிறுவனங்கள் – ஊழியர்களின் பணி கலாச்சாரம், நம்பிக்கை, திறமை, புதுமையான யோசனைகள் போன்றவற்றை ஆய்வு செய்து வேலை செய்வதற்கு சிறந்த இடம் என்ற பட்டியலை வெளியிடுகிறது. இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவின் ஆக்லாந்திலும், இந்தியாவின் தலைமை அலுவலகம் மும்பையிலும் உள்ளது.
இந்நிலையில், ஆசியாவில் பணி செய்வதற்கான சிறந்த இடம் – 2025-க்கான பட்டியலை, ‘கிரேட் பிளேசஸ் டூ வொர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 100 நிறுவனங்களில் 48 மிகப் பெரிய நிறுவனங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அத்துடன் 12 நடுத்தர நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் செயல்படும் 48 மிகப்பெரிய நிறுவனங்களில் நோவார்டிஸ், ஸ்னிடெர் எலக்ட்ரிக், எரிக்ஸன், விசா, நிவிடியா போன்ற நிறுவனங்களும் அடங்கும். இதுகுறித்து இந்நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் சி புஷ் கூறியதாவது: இந்த முன்னணி நிறுவனங்கள், தங்கள் பணி கலாச்சாரத்தையும் ஊழியர்களின் நம்பிக்கையையும், தலைமைத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
2025 பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் ஊழியர்கள், சாதகமான அனுபவங்களையே கூறியுள்ளனர்.ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் ஏஐ உட்பட பல்வேறு தடைகளையும் சந்திக்க அவர்கள் தயாராக உள்ளனர். பணி இடத்தை வலிமையாக்குவதன் மூலம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நிறுவனங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன” என்றார்.
மேலும், நிறுவன மேலாளர்கள் தங்களிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும், கொள்கை முடிவெடுப்பதில் தங்களை கலந்தாலோசிப்பதாகவும், வயது, பாலினம், பதவி, இனம் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் நிறுவனம் தங்களை நடத்துவதாகவும் பெரும்பாலான ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.