பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவான 4 அம்மா பாசக்கதைகளின் தொகுப்பே ‘நிறம் மாறும் உலகில்’. முதல் கதை மும்பையில் நடக்கிறது. அங்கே பெரிய தாதாவாக இருக்கிற நட்டியை போட்டு தள்ள துடிக்கிறது எதிர் டீம். தனது காதலியுடன் மும்பைக்கு வரும் ஒரு இளைஞனிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறது. ஆனால், அவரின் காதலியை தனது அம்மாவாக நினைக்கிறார் நட்டி. அது ஏன்? நட்டிக்கு என்ன நடந்தது என்பது அந்த பாகம்.
2 மகன்கள் இருந்தாலும், ஒரு கிராமத்தில் வறுமை, பசியின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள் வயதான தம்பதியினரான பாரதிராஜாவும், வடிவுக்கரசியும். இரண்டுபேரையும் மகன்கள் எப்படி நடத்துகிறார்கள். இருவரின் இறுதிகாலம் எப்படி அமைந்தது என்ற கோணத்தில் சொல்கிறது 2வது பாகம்.
மீனவரான ரியோராஜ், ஆதிராவுக்கான அம்மா பாசத்தை சொல்கிறது 3வது பாகம். அம்மாவுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட, அதற்காக பணம் திரட்டும் முயற்சியில் இறங்குகிறார் ரியோ. அவரால் பணத்தை சேர்க்க முடிந்ததா? ஆதிரா உயிர் பிழைத்தாரா என்பது 3வது பாகம்.
சென்னையில் ஆட்டோ ஓட்டும் சாண்டிக்கும், ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. மகன், மருமகளால் கைவிடப்பட்ட துளசியை தனது அம்மாவாக நினைக்கிறார் சாண்டி. ஆனால், அந்த பெண்ணோ ‘எனக்கு உன் அம்மா தேவையில்லை. நீ மட்டும் தனியே வா’’ என்கிறார். சாண்டி என்ன முடிவெடுத்தார் என்பது கடைசி பாகம்.
இப்படி நாலும் பாகத்திலும், மாறுபட்ட அம்மா பாசத்தை கொட்டியிருக்கிறார் இயக்குனர். கனிகா, வடிவுக்கரசி, ஆதிரா, துளசி ஆகியோர் அம்மாவாக நடித்து இருக்கிறார்கள். அவர்களின் நடிப்பும் சிறப்பு. அம்மா செ ன்டிமென்ட் தவிர, ஜாதி பிரச்னை, காதல், மீனவர் பிரச்னை, வயதானவர்களின் ஏக்கம், முதுமையின் வலி ஆகியவற்றை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். பாரதிராஜா போர்ஷன் சற்றே நாடகத்தனமாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது. சாண்டி போர்ஷன் கலகலவென நகர்கிறது. ரியோபோர்ஷன் சுமார். நட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறு மற்றும் சென்டிமென்ட்.