பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், இப்போது ‘திருக்குறள்’ படத்தைத் தயாரித்துள்ளது.
இது திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு கதையா என்று இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணனிடம் கேட்டால், ‘காமராஜ் படத்தை தொடர்ந்து இந்த படத்தை தயாரித்து, இயக்கிறேன். அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. இசை கோப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவை சமீபத்தில் சந்தித்து படக்குழுவினர் வாழ்த்து பெற்றோம்
படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அவரே இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் உள்ளார். அனைத்து இசைக் கோர்ப்பு பணிகளையும் முடித்துவிட்டு என்னை அழைத்தார்.
” முல்லைப் பூவின் வாசம் ” பாடலுக்கு இதுவரை நானே இசையமைக்காத, தொடாத ஒரு வித்தியாசமான ட்யூனை பயன்படுத்தி இருக்கிறேன் என்றார். அந்த பாடலை எனக்கு போட்டு காண்பித்தார். அந்தப் பாடல் நிச்சயம் 2025 ஆம் வருடத்தின் சிறந்த பாடலாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை