திமுகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்களின் சொத்து பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும். 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்தனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என்றும், 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு தானும் வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அண்ணாமலை ஆதாரமற்று ஏதேதோ பேசி வருகிறார். அவர் மீது நானும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம்” என்றார்.
அண்ணாமலை வெளியிட்டு இருந்த சொத்து பட்டியலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரும் இடம் பெற்று இருந்தது. 2008 முதல் 2011 வரை ரூ. 300 கோடிக்கு படம் எடுத்துள்ளார். அதில் நிறைய படங்கள் தோல்வியும் அடைந்துள்ளது. அப்படியிருக்கும்போது அவரது பட தயாரிப்பு நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,010 கோடியாக எப்படி உயர்ந்தது என்றும் அவருக்கு ரூ.2,039 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி விசாரணையை தொடங்கினார். முதல்கட்ட விசாரணையில் அவரிடம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் எழுத்தர் வின்சென்ட் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று தொடங்கிய இரண்டாம் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதே போல, மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேனும் சிறப்பு விசாரணை அதிகாரியிடம் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, அவர் திரட்டிய தகவல்களை விசாரணை அதிகாரியிடம் வழங்கினார். இதனையடுத்து, ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், சித்ரவதை செய்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ், நெல்லை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஹெலிகாப்டரில் சென்றது ஏன் – காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்
கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முந்தினம் தேர்தல் பணிக்காக அண்ணாமலை, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். இது தொடர்பாக, உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய் குமார் சொர்கி ஹெலிகாப்டரில் பணம் கொண்டுவரப்பட்டது என குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அண்ணாமலை, “உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன்” என்று கூறியுள்ளார்.
குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் குற்றம்; தள்ளிட்டு வந்தா பைன் போடக்கூடாது – போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சத்யராஜ் மற்றும் வினோத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதனை உறுதி செய்வதற்காக பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து, சத்யராஜ், தனது மனைவி அக்ஷயாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வர வைத்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த அக்ஷயா ,போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்தால் மட்டுமே பைன் போட வேண்டும் எனவும், வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் பைன் போடக்கூடாது எனவும் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். A எம்பி-ஐ அழைத்து வர வேண்டுமா? எம்எம்ஏ-வை அழைத்து வர வேண்டுமா? என்று கேள்வி கேட்ட அக்ஷயா, போலீஸ்காரர்கள் எல்லாருமே பிராடு தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ்காரர் ஒருவரையும் அவர் தாக்கியுள்ளார். இந்த விவகாரத்தில், போலீஸ்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யராஜ், அவரது மனைவி அக்ஷயா, நண்பர் வினோத் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.