No menu items!

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது எப்படி?

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது எப்படி?

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லை. அவரது குடும்பத்தினர் தீயணைப்புத்துறைக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது நீதிபதி வீட்டின் ஒரு அறையில் கட்டுக் கட்டடாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தீயணைப்பு படையினரையும், போலீஸாரைம் அதிர்ச்சியடைச் செய்தது. பணம் அதிகளவில் இருப்பது குறித்து போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் வீடு என்பதால் இத்தகவல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கொலீஜியம் கூட்டத்தை கூட்டி இச்சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தினார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை உடனடியாக டெல்லியில் இருந்து பணியிடமாற்றம் செய்யவேண்டும் என கொலீஜியம் ஒருமனதாக முடிவு செய்தது. கடந்த 2021-ம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது மிக மோசமான சம்பவம் என்பதால், வெறும் பணியிடமாற்றத்தோடு விட்டால், அது நீதித்துறையின் கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கொலீஜியம் உறுப்பினர்கள் கருதினர். அதனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை ராஜினாமா செய்யும்படி கோரவேண்டும், அவர் மறுத்தால், அவரை நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்வதற்கான முதல் நடவடிக்கையாக நீதிமன்ற விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்க வேண்டும் என கொலீஜியம் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ம் ஆண்டு வகுத்த நடைமுறையில், அரசியல்சாசன நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு, முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அவரிடம் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்கலாம்.

பணியிட மாற்றம்: வீட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கிய சம்பவத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டது முதல் நடவடிக்கை அல்ல. இந்த விவகாரம் குறித்து, நீதித்துறை குழு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயாவிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாணை முடிவுகள் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை ராஜினாமா செய்யும்டி கேட்டுக்கொள்ளப்படலாம் அல்லது அரசியல்சாசன சட்டத்தின் 124(4)வது பிரிவின் கீழ் நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம். வீட்டில் அதிகளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காத நீதிபதி யஷ்வந் வர்மா நேற்று விடுமுறை எடுத்தார்.

தர்மசங்கடம்: உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, கொலீஜியம்தான் தேர்வு செய்கிறது. தற்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட சர்ச்சையால் கொலீஜியத்தின் செயல்பாடு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் கூறுகையில், ‘‘ நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்து கொலீஜியம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதை நாங்கள் கூறுவது முதல் முறை அல்ல’’ என்றார்.

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் கொலீஜியம் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டவுடனேயே இதை கொலீஜியம் முழுவதுமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் எவ்வளவு பணம் மீட்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டியது கொலீஜியத்தின் கடமை’’ என்றார்.

வெளிப்படைத்தன்மை தேவை: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில், மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று எழுப்பினார். இது குறித்து முன்னாள் வழக்கறிஞரான மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதில் அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து ஜெகதீப் தன்கர் கூறுகையில், ‘‘ இந்த விவகாரம் உடனடியாக வெளிச்சத்துக்கு வராததுதான் மிகவும் கவலையளிக்கிறது. இதேபோன்ற சம்பவத்தில், ஒரு அரசியல்வாதியோ, அரசு உயர் அதிகாரியோ, தொழிலதிபரோ சிக்கியிருந்தால், அவர் உடனடி நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பார். இந்த விவகாரத்தில் வெளிப்படையான பதில் தெரிவிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

55 எம்.பி.க்கள் மனு: இந்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் 55 பேர் மனு அளித்துள்ளதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மனு அளித்துள்ளதால், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலுக்கு உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...