இளம் தம்பதியான தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், காளி வெங்கட் அவரது மனைவி வினோதினி மற்றும் அவர்களது பையன் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை அறிவியல், என்பதை புரிந்துக் கொள்கிறார்கள்.
அதே சமயம், இரு குடும்பமும் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்ளும் விசயங்கள், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல அதிர்ச்சியான மற்றும் ஆச்சரியமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இந்த சிக்கலைகளை அவர்கள் எபடி எதிர்கொள்கிறார்கள் என்பதை வித்தியாசமான பேய் படமாக நம் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜவேலு.
தர்ஷன் – அர்ஷா தம்பதியினர் இயல்பாக நடித்து நம்மை கதைக்குள் அழைத்துசெல்கிறார்கள். பக்கத்து வீட்டில் கேட்கும் குரல், அதறகு சுவரில் கிடைக்கும் பதில், இடி விழுந்து பழைய நினைவுகளை கொண்டு வரும் விஞ்ஞான காரணம் என்று படம் முழுவது கதைக்கான நியாயமான காரணத்தை இயக்குனர் ராஜவேலு வைத்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.
படம் தொடங்கிய அரை மணி நேரத்தில் ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவதும், எல்லா பேய் படங்களில் நடக்கும் ஒரே டெம்லேட் காட்சிகளும் போரடிக்க வைக்கிறது. அதன் பிறகு தான் படத்தில் விறுவிறுப்பே ஆரம்பிக்கிறது. அதன் பிறகு குழந்தை செண்டிமெண்ட் காளீ வெங்கட் நடிப்பு என்று படத்தை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது திரைக்கதை.
படத்தில் நடித்த அனைவரும் நிறைவாக செய்திருக்கிறார்கள். எந்த வருடத்தில் இருக்கிறோம் என்பதை சொல்லும் இடமும், குழந்தை உயிரோடு இருக்கிறதா என்பதை சொல்லும் இடமும் திக் திக் நிமிடங்கள். க்ளைமேக்ஸ் காட்சி நெஞ்சில் நிறைந்து விடுகிறது.