தமிழ் திரையுலகில் ‘பவுண்ட் புட்டேஜ்’ ஹாரர் பாணியில் உருவாகும் முதல் படம் ‘மர்மர்’. ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். புதுமுகங்கள் பலர் நடித்துள்னர். அதென்ன பவுண்ட் புட்டேஜ் பாணி என்று இயக்குனரிடம் கேட்டோம்
‘‘அது பற்றி விரிவாக சொல்கிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தால், அது குறித்த விசாரணையை தொடங்கும் போலீஸ் உள்ளிட்ட அமைப்புகள், முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள்தான் அவர்கள் தரப்பின் ஆவணமாக இருக்கும். அதுதான் பவுண்ட் புட்டேஜ். இந்த கதைப்படி, அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதுதான் இந்த படம் ’’என்றார்
மேலும் அவர் கூறுகையில் ‘‘அடிப்படையில் நான் பிசியோதெரிபி மருத்துவர். சினிமா ஆர்வத்தில் இயக்குனர் ஆகியிருக்கிறேன். ஜவ்வாது மலைபகுதியில் படப்பிடிப்பு நடந்ததால், பலர் வாங்கிய சம்பளத்தில் பெரும் பகுதியை மருத்துவத்திற்கே செலவு செய்திருப்பார்கள். அவ்வளவு பிரச்னைகள். நாங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. முதலில் வாகனங்களில் செல்வோம். அதன் பிறகு கரடுமுரடான பாதையை கடக்க வேண்டியிருக்கும். அங்கு எத்தனை திறமையான டயர்கள் என்றாலும் அவை பஞ்சர் ஆகிவிடும். அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் வரை நடந்து செல்ல வேண்டும். இப்படி நாங்கள் தினந்தோரும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கே மூன்று மணி நேரம் ஆகிவிடும். அப்படி அங்கு செல்லும் போது எங்களுக்கு அந்த ஊர்மக்கள் அதிர்ச்சிகர செய்தியை சொன்னார்கள். அந்த பகுதியில் கன்னிகள் வாழ்வதால், நாங்கள் காலணி எதுவும் அணியக்கூடாது, மாமிசம் எதுவும் சாப்பிடக்கூடாது என்றார்கள். என் படத்தின் கதையும், கன்னிமார்கள் சம்பந்தப்பட்டது’ என்றேன். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.