பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருது வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மறைந்த கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவைப் போற்றும் வகையில், ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்ற பெயரில் சென்னை மியூசிக் அகாடமி 2005ஆம் ஆண்டு முதல் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான விருது கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என மியூசிக் அகாடமி அறிவித்தது. இதை எதிர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது..
கடந்த 2004-ம் ஆண்டு எனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி அவரது நினைவைப் போற்றி கவுரவிக்கும் வகையில் அவருடைய பெயரில் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்ற விருதை ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து வழங்கி வருகிறது.
அதன்படி மியூசிக் அகாடமியின் வருடாந்திர இசை கச்சேரிக்கான சீசனின்போது ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசை உலகுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் பாடகர்களுக்கு ‘சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி’ விருது வழங்கப்படுகிறது. அதன்படி வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு விழாவில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எனது பாட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் எனது பாட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எதிரான கருத்துகளை மலிவான விளம்பரத்துக்காகக் கூறி வருகிறார். கர்நாடக இசை உலகில் சிறந்து விளங்கிய எனது பாட்டியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை, அவருடைய பெயரைக்கொண்டு கவுரவிப்பது எவ்வாறு சரியாகும்? எனவே மியூசிக் அகாடமியில் அடுத்த மாதம் டிசம்பரில் நடைபெறவுள்ள 98-வது ஆண்டு விழாவில் டி.எம். கிருஷ்ணாவுக்கு எனது பாட்டியின் பெயரில் சங்கீத கலாநிதி விருது வழங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி மியூசிக் அகாடமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், “மனுதாரர் குறிப்பிட்டுள்ள விருதுக்கான நபரை தேர்வு செய்வதில் எங்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. கடந்த 2005-ம் ஆண்டு முதல் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் குழுமம்தான் அந்த விருதாளர்களைத் தேர்வு செய்து வருகிறது. இதற்கு மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதால் இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை” என கூறியிருந்தது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவி்ல், “இந்த வழக்கைத் தொடர எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் என்ற அடிப்படையில் மனுதாரருக்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது. இறந்த ஆன்மாவைக் கவுரவிப்பதற்கான சிறந்த வழி, அவரது விருப்பத்துக்கு மதிப்பளிப்பதும், அவரைப் போற்றி கவுரவிப்பதும், அவரது புகழுக்கு அவமரியாதை செய்யாதிருப்பதும் ஆகும். எனவே இந்தாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது.