மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று சட்டத்துக்கு வில்லனாகவும், மக்களுக்கு நல்லவனாகவும் வாழ்ந்தவர்களை முக்கிய பாத்திரமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்திருக்கின்றன. இப்போது மலையாள திரையுலகிலும் இதே போன்றதொரு படம் தயாராக உள்ளது. ஆனால் இதன் முக்கிய பாத்திரம் நெகடீவ் கேரக்டர் கொண்ட மனிதர்கள் அல்ல. ஒரு யானை. தேனி பகுதியில் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானைதான் இந்த படத்தின் நாயகன். அதன் வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்படுகிறது.
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் தேனி மாவட்டத்தை ஒட்டி சுற்றித் திரிந்து மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய யானைதான் இந்த அரிசிக்கொம்பன். ஊடகங்களால் கடந்த பல காலமாக உச்சரிக்கப்படும் இந்த அரிசிக் கொம்பனின் பூர்வீகம் கேரளா என்று சொல்லப்படுகிறது.. அங்கு இதற்கு அரிக்கொம்பன் என்று பெயர். 35 வயதான இந்த யானை, சில நாட்களுக்கு முன் தமிழக எல்லைக்குள் புகுந்தது.
தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் 2 வாரங்களூக்கு முன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கும்கி யானைகள் உதவியுடன் இந்த யானை பிடிக்கப்பட்டது. அங்கு பிடிபட்ட பிறகு நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட அரிசிக் கொம்பன், அங்கிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் அப்பர் கோதையாறு முத்துக்குளி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
அரிசிக்கொம்பனை நெல்லை மாவட்ட்த்துக்கு கொண்டு சென்றதை கேரள மக்கள் ரசிக்கவில்லை. குறிப்பாக கேரளாவில் உள்ள சின்னக்கனால், ஆடுவிழுந்தான்குடி, செம்பக்கா தொழு உள்ளிட்ட 5 பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள், அந்த யானை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசிக் கொம்பனை கேரளாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி அரசை மிரட்டி வருகிறார்கள்.
இந்த சூழலில்தான் ‘அரிகொம்பன்’ என்ற பெயரில் அந்த யானையைப் பற்றிய படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சாஜித் யாஹியா என்ற இயக்குநர். அரிசிக் கொம்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
“இலங்கை மற்றும் கேரளாவில் உள்ள சின்னக்கல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். சக உயிரினங்களின் உரிமைகளை மதிக்காத மனிதர்களின் சுயநலப் போக்கைப் பற்றி இந்த படம் பேசும். 2 வயதில் தாயை இழந்த அரிக்கொம்பனின் (அரிசிக் கொம்பன்) போராட்ட வாழ்க்கையை இந்த படம் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்” என்றும் சாஜித் யாஹியா தெரிவித்துள்ளார்.