வடகிழக்கு பருவக் காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. பல இடங்களில் சராசரியாக 7-8 செ.மீ மழை பெய்துள்ளது. அதிகமாக வில்லிவாக்கத்தில் 10 செமீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் நீச்சல் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது.சென்னை உயர் நீதிமன்ற சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை, மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மழைக்கு இதுவரை இருவர் உயிரிழந்து உள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்து உள்ளார். வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னையில் மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. காலை வேளையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்தந்த மாகாண நிர்வாகங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகை ரம்பா சென்ற கார் விபத்து; மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது விபரீதம்…
கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். ஈஆஅதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்வார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
மேலும், எல்லாம் கெட்ட நாட்கள், கெட்ட நேரம் என்றும் ரம்பா அப்பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன் அவருடைய மகள் குறித்தும் ரம்பா பதிவிட்டுள்ளார். தமது ஒரு மகள் மட்டும் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் கேட்டுகொண்டுள்ளார்.