தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் ஒன்று சேர்ந்து எடுத்து முடிவு நன்றாகவே ஒர்கவுட் ஆகியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் நடிகைகளை அவதூறாக பேசும் சிலரை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கபப்ட்டது. இதன்படி அப்படி அவதூறு பேசியவர்களின் சிலரை நோக்கி நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் சார்ப்பாக ஒரு குழு அமைக்கபப்ட்டது. இதன் பொறுப்பில் நடிகை ரோகிணியை நியமித்தார்கள். அவரும் முதல் கட்டமாக மருத்துவர் காந்தராஜ் மீது சென்னை காவல்துறை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் கொடுத்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு காந்தராஜ் பேசிய வீடியோவில் நடிகைகளை பற்றி ஆபாசமாக பேசியதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து சிசிபி காவல் பிரிவில் காந்தராஜ் ஆஜராக வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காந்தராஜ் மன்னிப்பு கடிதம் எழுதிக்க்கொடுத்துள்ளார். அதில் நடிகைகள் குறித்து வேண்டுமென்றே நான் அப்படி பேசவில்லை, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நான் அளித்த அந்த பேட்டியில் நான் நடிகைகள் குறித்து பேசியது தவறு தான். யாருடைய மனமும் புண்பட வேண்டும் என்று நான் அவ்வாறு பேசவில்லை. இருப்பினும் எனது கருத்துக்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விவகாரத்தில் காந்தராஜ் கடிதம் கொடுத்திருப்பது நிலைமையை சுமூகமான சூழலுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள் அனைவரும் நடிகை ரோகிணிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அவர் எடுத்த சட்ட நடவடிக்கைக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று இதைப்பார்க்கிறார்கள். இன்னும் அடுத்தடுத்த புகார்கள் கொடுக்கவும் ரோகிணி தயாராகி வருகிறார் என்கிறார்கள்.