பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்திரராஜன் 103வது பிறந்த நாள் இன்று. மதுரையில் 1923ம் ஆண்டு பிறந்த டி.எம்.எஸ், சிறுவயதிலேயே முறைப்படி இசை கற்று, பின்னர் சென்னைக்கு வந்தார். 1950ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகர் ஆனார். மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆருக்காக ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடலை முதலில் பாடினார். எம்ஜிஆரின் கடைசி படமான ‘மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை அவருக்காக பாடினார். எம்ஜிஆரின் சினிமா, அரசியல் வளர்ச்சிக்கு டி.எம்.எஸ் குரலும் முக்கியமான காரணம் என்றால் மிகையில்லை.
அவரை போல பல முன்னணி நடிகர்களுக்காக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடினார். முருகன் பக்தி பாடல்கள் உட்பட, பல பக்தி பாடல்களையும் பாடினார். 2013ம் ஆண்டு,தனது 91வயதில் காலமானார். இன்றைக்கும் காதல், சோகம், துள்ளல், ஆன்மிகம், தத்துவம் என பல அலைவரிசைகளில் டிஎம்எஸ் பாடல்கள் போற்றப்படுகின்றன. பலரால் இன்றும் முணுமுணுக்க, ரசிக்கப்படுகின்றன.
டி.எம்.எஸ்க்கு வாழும் காலத்தில் கலைமாமணி, பத்மஸ்ரீ உட்பட சில அங்கீகாரங்களே கிடைத்தன. 40 ஆண்டுகளாக பாடியவருக்கு தேசியவிருதுகள் தேடி வரவில்லை. மத்திய அரசின் பல அங்கீகாரம் கிடைக்கவில்லை. 2010ம் ஆண்டு திமுக அரசு நடத்திய கோவை செம்மொழி மாநாட்டுக்காக அவர் பாடிய செம்மொழியான தமிழ்மொழிதான், அவரின் கடைசி பாடல். அந்தவகையில், மதுரையில் டி.எம்.எஸ் உருவ சிலையை சமீபத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் அவர் வாழ்ந்த மந்தைவெளிபாக்கம் சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது. ஆனாலும், டிஎம்எஸ் திறமைக்கான பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணுகிறார்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் ‘‘டிஎம்எஸ் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் பாடல்களை அரசு, சினிமாதுறையினர் இன்னும் அதிகமாக இளைஞர்களிடம் போய் சேர்க்க வேண்டும். யூடியூப், சமூக வலைதளங்களில் டிஎம்எஸ் பாடல்கள், அதில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள், திறமைகளை வெளியில் கொண்டு வர வேண்டும். அதற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். குறிப்பாக, டி.எம்.எஸ் பாடல்களை ஆய்வு செய்ய, ஊக்கம் கொடுக்க வேண்டும்.