இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், வடிவேலு, ஊர்வசி நடித்த ‘தமிழ்’ படம், 2002ம் ஆண்டு உருவானது. கமர்ஷியலாக அந்த படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் அந்த கூட்டணி உருவாகி உள்ளது. பிரசாந்த் நடிக்கும் 55வது படத்தை ஹரி இயக்குவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
இது குறித்து ஹரி கூறுகையில் ‘‘இன்று பிரசாந்த்சாருக்கு பிறந்தநாள். அதை முன்னிட்டு புதுப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. உண்மையில் அவர் பிறந்தநாளை நான் மறக்க மாட்டேன். 24 ஆண்டுகளுக்குமுன் அவரின் ஒரு பிறந்தநாளில்தான் நாங்கள் இணைவதாக முடிவு செய்தோம். ஆரம்பத்தில் 11 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றினே். பின்னர் சரண்சாரிடம் இணை இயக்குனராக இருந்தேன். அவர் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த பார்த்தேன் ரசித்தேன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அப்போது, ஹீரோவிடம் பேசு, உன் கதை அவரிடம் சொல்லு என்று சரண்சார் உற்சாகப்படுத்தினார். அந்தவகையில், தமிழ் கதையை அவரிடம் சொன்னேன். முழு கதையை கூட சொல்லவில்லை. சின்ன, சின்ன சீன்களாக சொன்னேன். என் மீதான் நம்பிக்கையில் எனக்கு கால்ஷீட் கொடுத்தார்கள். என் முதல் படமாக தமிழ் உருவானது. அந்த படத்தின் வெற்றியால், படம் வெளியான 2வது நாளே கவிதாலயா நிறுவனம் எனக்கு அட்வான்ஸ் கொடுத்தது. சாமி படத்தை இயக்கினேன். என் கேரியர் பிரசாந்த்தால் நன்றாக இருக்கிறேன். 25 ஆண்டில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்’’ என்றார்
நடிகர் பிரசாந்த் பேசுகையில் ‘‘கடந்த ஆண்டு நான் நடித்த அந்தகன் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது மீண்டும் ஹரியுடன் இணைகிறேன். இது பக்கா கமர்ஷியல் படம். நான் நடிக்கும் 55வது படமும் கூட. அப்பா தியாகராஜனே தயாரிக்கிறார். ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளுக்கும் எனக்கு ஒரு வித்தியாசமான கிப்டை கொடுப்பார் அப்பா. இந்த பிறந்தநாளுக்கு எனக்கு ஒரு படம் கொடுத்து இருக்கிறார். அது பெரிய கிப்ட். ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செல்லும் வகையில் இந்த படம் அமையும். தமிழ் படம் குறித்து இன்றும் பேசுகிறார்கள். அந்த மாதிரி புதுப்படமும் விறுவிறுப்பாக, பாடல், பைட், கதை என சிறப்பாக அமைகிறது.