ஷேக் ஹசீனாவை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்கதேச அரசு கோரிக்கை வைத்துள்ளது.
வங்கதேசத்தில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றோரின் குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து கடந்த சில மாதங்களாக நடந்த மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். மாணவர்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்தார். உயிர் பிழைப்பதற்காக இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்தியாவும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து அந்நாட்டில் அமைந்த இடைக்கால அரசு, மாணவர்கள் போராட்டத்தின்போது நடந்த படுகொலைகள் பற்றி விசாரித்து வருகிறது. குறிப்பாக, மாணவர் போராட்டத்தின் போது, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை நடந்த குற்றங்களின் அடிப்படையில் ஹசீனா மற்றும் 9 பேர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள இந்தியாவில் அடைக்கலமாகி இருக்கும் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை வழக்கறிஞர் எம்.டி தாஜுல் இஸ்லாம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்வோம். புதிய வழக்குகளை விசாரிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்டு தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.