ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் வரி நிவாரணம் அளிக்க வேண்டும், நடுத்தர மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ வேண்டும், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி துறைகளில் கவனம் செலுத்துவது முக்கியமான விஷயங்கள்.
ஜிஎஸ்டி வரி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை முன்பு 65 லட்சமாக இருந்தது. இது தற்போது 1.51 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும், மக்கள் கையில் பணம் புரளும்.