உலகையே கலக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவான ‘நார்கோஸ்’ என்ற வெப் தொடர் பட்டையை கிளப்பியது. அந்த பாப்லோ எஸ்கோபரே தான் அஞ்சும் ஒரே நபர் க்ரிஸெல்டா என்ற பெண் தான் என்று கூறியதாக ஒரு தகவல் உண்டு. அந்த வாசகங்களுடன் தான் இந்த தொடரே தொடங்குகிறது.
1970-களின் இறுதியில் தொடங்கி 2000-ன் தொடக்கம் வரை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை கலக்கிய பெண் க்ரிஸெல்டா ப்ளான்கோ. கொலம்பியாவைச் சேர்ந்த இந்த பெண் அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தின் முடி சூடா அரசியாக திகழ்ந்தார். இவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான தொடர்தான் ‘க்ரிஸெல்டா’ (Griselda).
1978-ஆம் ஆண்டு தனது மூன்று மகன்களுடன் காயம்பட்ட நிலையில் ஃப்ளோரிடாவின் மியாமி நகரத்துக்கு வந்து சேர்கிறார் க்ரிஸெல்டா ப்ளான்கோ (சோஃபியா வெர்கரா). அவருக்கு அடைக்கலம் தந்து உதவும் தோழி கார்மென் (வனெஸ்ஸா ஃபெர்லிடோ) தனது டிராவல் ஏஜென்சியில் ஒரு வேலையும் தருகிறார்.
ஆனால், வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே தான் கொலம்பியாவிலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு கிலோ கொக்கைன் போதைப் பொருளை விற்க முயற்சி செய்கிறார் க்ரிஸெல்டா. இது அவரது தோழிக்கு தெரியவர, அவரை வேலையை விட்டு நீக்குகிறார். இங்கிருந்து தொடங்கும் க்ரிஸெல்டாவின் பயணம், மியாமியின் போதைப் பொருள் உலகின் ‘காட்மதர்’ என்ற நிலையை எட்டியது எப்படி என்பதை மிக அழுத்தமாகவும், சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமலும் சொல்கிறது லிமிடெட் தொடரான ‘க்ரிஸெல்டா’.
முழுமையான பயோபிக் என்றில்லாமல் வெப் தொடருக்காக ஏராளமான கற்பனைகளையும் சேர்த்து எழுதியிருக்கிறது ‘நார்கோஸ்’ தொடரின் மூலம் கவனிக்க வைத்த ஆண்ட்ரே பயாஸ், டன் மிரோ இணை. கிட்டத்தட்ட ‘நார்கோஸ்’ பாணியிலான திரைக்கதைதான் என்றாலும் லிமிடெட் சிரீஸ் என்பதற்காக காட்சிகளை நீட்டி முழக்காமல் சொல்ல வந்த விஷயத்தை ஷார்ப் ஆக சொல்லிச் சென்றிருப்பது சிறப்பு. தொடக்கம் முதல் இறுதி வரை 6 எபிசோட்களை கொண்ட இத்தொடர் எங்கும் தேங்கி விடாமல் விறுவிறுப்பாக செல்கிறது.
நிஜத்தில் 10 ஆண்டுகள் நியூயார்க்கில் தனது போதைப் பொருள் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திவிட்டு வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே மியாமி வந்தார் க்ரிஸெல்டா. ஆனால் தொடர் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள்ளாகவே நிஜம் எது கற்பனை எது என்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் செல்ல விடாமல் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது திரைக்கதை.
’நார்கோஸ்’ தொடரில் இருந்த ஒருவித ஆவணப்படத் தன்மை எங்கும் எட்டிப் பார்த்துவிடாமல் பார்த்துக் கொண்டது சிறப்பு. வெறும் ஆறு எபிசோட்தான் என்றாலும் மகன்களுடன் மியாமி வரும் க்ரிஸெல்டா மெல்ல மெல்ல அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்வது, போதைப் பொருள் மூலம் கிடைக்கும் பணமும், அது கொடுக்கும் தைரியமும் அவருக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவற்றை ஆடியன்ஸுக்கு மிக அழுத்தமாக கடத்தியதை பாராட்டத்தான் வேண்டும். எந்த இடத்திலும் அவசரகதியில் கதையை நகர்த்திச் செல்லவில்லை.
’மாடர்ன் ஃபேமிலி’ சிட்காம் பார்த்தவர்களுக்கு சோஃபியா வெர்கரா மிக பரிச்சயம். அதில் பணக்கார கொலம்பிய – அமெரிக்க பெண்ணாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்தவர் இதில் மிக தீவிரமான ஒரு கதாபாத்திரத்தில் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் ஈர்க்கிறார். எப்போதும் கண்களில் ஒருவித தீவிரத்தன்மை, பார்ப்பவர்களை எல்லாம் சந்தேகப்படுவது என அட்டகாசமான நடிப்பு. குறிப்பாக 5வது எபிசோடில் ஒரு முழுநீள பார்ட்டில் காட்சியில் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது.
முழுக்க முழுக்க க்ரிசெல்டாவின் பார்வையில் சொல்லப்படும் கதை என்றாலும் எங்கும் அவரது தவறுகளை இயக்குநர் நியாயப்படுத்தி அவரை முழுமையாக ஷீரோவாக்க முயலவில்லை. கடைசி எபிசோடில் சிறையில் இருக்கும் க்ரிஸெல்டாவுக்காக அவரது உதவியாளர் ரிவி செய்யும் ஒரு சம்பவத்தை (நிஜ வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது) புத்திசாலித்தனமாக காட்சிப்படுத்திய விதம் க்ளாஸ் ரகம்.