நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், பிரிட்டனை சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் நேற்று (09-10-24) இந்த அறிவிப்பை வெளியிட்டது.
புரதங்கள், மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும். அவை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் காணப்படுகின்றன. எனவே, புரதங்களை நன்கு புரிந்துகொள்வது மருத்துவத்தில் பெரும் முன்னேற்றங்களை உருவாக்கியுள்ளது.
பரிசு அறிவிக்கப்பட்ட மூவரில் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரான டேவிட் பேக்கர், அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார். இந்த முறை மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல அறிவியல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய புரதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. இவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். “நோபல் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவும், மிகவும் கௌரவமாகவும்” இருப்பதாக டேவிட் பேக்கர் கூறினார்.
ஜான் ஜம்பர், டெமிஸ் ஹசாபிஸ் இருவரும் லண்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ளனர். இவர்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏற்கனவே அறிந்த புரதங்களின் வடிவமைப்புகளை கணித்து, ‘ஆல்பாஃபோல்ட்2’ என்ற கருவியை உருவாக்கினர். இது தற்போது உலகம் முழுவதும் 20 கோடி புரதங்களை ஆராய பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவி வேதியியல் துறையில் ‘முழுமையான புரட்சி’ செய்ததாக நோபல் தேர்வு குழு குறிப்பிட்டுள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசு 1.1 கோடி ஸ்வீடிஷ் க்ரோனர் (இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் பரிசுத் தொகையை கொண்டது. இந்த பணத்தை இவர்கள் மூவரும் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டெமிஸ் ஹசாபிஸ், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனவனமான ‘கூகுள் டீப் மைண்ட்’-இன் இணை நிறுவனராவார் என்பது குறிப்பிடத்தக்கது. கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், டெமிஸ் ஹசாபிஸ் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார். கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், அவர் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார், அதற்காகப் பல விருதுகளை வென்றார்.