No menu items!

காத்திருப்புக்குகுட்பை: பதினைந்து நாளில் பட்டா – அரசு அதிரடி!

காத்திருப்புக்குகுட்பை: பதினைந்து நாளில் பட்டா – அரசு அதிரடி!

சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல் உட்பட பல ஆவணங்களுக்கும் அரசு அலுவலகம் ஏறி இறங்குபவர்கள் பலரின் அனுபவம் அலைச்சல், லஞ்சம் என நிச்சயம் கசப்பானதாகத்தான் இருக்கும். இதற்கு ஒரு முடிவு வருகிறது. இனி இந்த ஆவணங்களை ஆன்லைன் வழியாக விண்ணபித்து வாங்கலாம் என்பதுடன், விண்ணப்பித்த 16 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு தாலுக்காவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

வருவாய்துறையை பொறுத்தவரை பட்டா மாற்றம் என்பது முக்கியமான பணியாகும். சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும்போதே, பட்டா மாற்றம் செய்யும் நடைமுறை அமலில் இருந்தாலும், நீதிமன்றம் வலியுறுத்தியும், வருவாய் துறையினர் அதை செய்ய முன்வருவதில்லை. இதனால் பட்டா மாற்றம் செய்திட பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. பட்டா மாற்றத்தில் ஒருவர் தன்னுடைய பட்டாவில் உள்ள முழு நிலத்தையும் ஒருவருக்கு விற்பனை செய்தால், அது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் எனவும், அந்த நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து விற்பனை செய்தால் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்றும் அழைக்கப்படுகிறது.

இதில், வீட்டுமனை வாங்கிய பொதுமக்கள் பெரும்பான்மையினர் உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்து விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனால், பத்திரப் பதிவு செய்யும் சொத்துக்களுக்கு தாசில்தார் அலுவலகத்தில் விரைந்து பட்டா வழங்காமல், பொதுமக்களை அலைக்கழிப்பதாக அரசுக்கு புகார்கள் வர தொடங்கின.

இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதுடன் 16 தினங்களுக்குள் வழங்கவும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இனிமேல் இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை என்னும் நிலை உருவாகியுள்ளது.

பட்டா மாறுதல் நடைமுறையை விரைவுப்படுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி மாவட்ட மற்றும் தாலுகா அளவில் ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க துணை ஆட்சியர் அந்தஸ்தில் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. தாலுகாவிற்கு வெளியில் இருந்து துணை தாசில்தார் அல்லது உதவியாளர்கள் குழுவை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்பட உள்ளார்.

துணை ஆட்சியர் தலைமையிலான குழுவினர் தாலுகாக்களில் மின்சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் வழங்குவதில் முன்னேற்றம் மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்வர். மேலும் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் 16 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைக்கப்படாமல், சரியான நேரத்தில் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்வர். பட்டா மாறுதல் விவகாரங்களில் முறைகேடுகள் மற்றும் தாமதங்களை தவிர்க்க வெளிதாலுகாக்களை சேர்ந்த அதிகாரிகளை இதில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டா மாறுதல் தவிர்த்து, சாதி சான்றிதழ், இருப்பிடம், வருமானம், வாரிசு சான்றிதழ் 25 வகையான வருவாய்துறையின் சேவைகளும் இணைய வழியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஒருங்கிணைத்து வரும் நிலையில், இச்சான்றிதழ்கள் அனைத்துமே 16 தினங்களுக்குள் இனி வழங்கப்பட உள்ளன. சான்றிதழ்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை, பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

தாமதமான நடவடிக்கை என்றாலும் அவசியமான நடவடிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...