சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4,160 வரை உயர்ந்துள்ளது. இந்த புதிய உச்சங்கள் நடுத்தர வர்க்க மக்களை இனி தங்கம் வாங்குவது கனவு தான் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என புதிய உச்சம் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்தது. இதனால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.
ஆனால் 5 நாட்கள் சரிவுக்குப் பின்னர் இந்த வாரம் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. நேற்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்தது. அதாவது கடந்த மார்ச் 3-ம் தேதி விற்பனையானது போல் நேற்றும் தங்கம் விலை பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது.
இதற்கு ட்ரம்ப் வரி விதிப்புகளால் நிலவும் சர்வதேச பொருளாதார நிச்சயமற்றத் தன்மை மிக முக்கியக் காரணமாக உள்ளது. பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. வரிக்கு வரி என்று இந்த வணிகப் போர் அமெரிக்கா – சீனா இடையே வலுத்துவருகிறது.
இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். எனினும் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று தெரிவித்தார். மேலும் சீனாவுக்கான பரஸ்பர வரியை மட்டும் ட்ரம்ப் 125 சதவீதமாக அதிகரித்தார். ஆனாலும் நேற்று ஷாங்காய் சந்தைகள் ஏற்றத்துடனேயே இருந்தன. இந்த நிலையில் தற்போது சீன பொருட்கள் மீதான வரி 145% ஆக அதிகரிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சீனாவுக்கு 145%; பேஸ்லைன் வரி 10% – சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 145 சதவீத வரியும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் வராத அலுமினியம், ஆட்டோமொபைல்கள் மற்றும் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், மற்ற அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.