இயக்குநர் மகேந்திரன் நினைவு பிலிம் & மீடியா அகாடமி தொடக்கவிழா சென்னையில் நடந்தது. மகேந்திரன் உதவியாளரும், பிரபல இயக்குனருமான யார் கண்ணன் இதை தொடங்கியுள்ளார். சென்னையில் நடந்த இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் செல்வமணி, எடிட்டர் லெனின், நடிகர் மோகன், நடிகை தேவயானி, பாடலாசிரியர் முத்துலிங்கம், நடிகை குட்டி பத்மினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் மோகன் பேசுகையில் ,‘‘ இயக்குனர் மகேந்திரன் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, திறமையான எழுத்தாளரும் கூட. பொதுவாக, பல இயக்குனர்கள் ஒரே பாணியில் படங்களை இயக்குவார்கள். ஆனால், மகேந்திரன் மாறுபட்ட படங்களை தந்தார். அவர் பங்காற்றிய தங்கப்பதக்கம் வேறு மாதிரியான கதை. உதிரிப்பூக்கள் வேறு ரகம். பூட்டாத பூட்டுகள் புது ரகம். ஜானி பற்றி கேட்கவே வேண்டாம். பிளாக் அண்ட் ஓயிட், கலர் என இரண்டு தளத்திலும் இயங்கி, தன்னை நிரூபித்தார். மகேந்திரன் படங்களில் ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரத்தின் தன்மை தனித்து நிற்கும். ஜானியில் ரஜினி சாரையே புது மாதிரி மாற்றினார். அந்த கேரக்டர்கள் நம் மனதை தொடும். மகேந்திரன் சார் பற்றி பேசுவது பெருமை, கவுரவமும் கூட.
பாலுமகேந்திரா மூலமாக நான் அறிமுகம் ஆனாலும் மகேந்திரன் சாருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். சீங்கீதம் சீனிவாசராவ் பலரிடம் பணியாற்றி இருக்கிறேன். அது இறைவன் கொடுத்த வரம். அந்த வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி, 1960 முதல் 1990வரை பல படங்களை கொடுத்தார். ஒவ்வொரு படத்திலும் மேக்கிங் ஸ்டைல் வேறு மாதிரி இருக்கும். எந்த மாதிரி கதையை, யாரை வைத்து எடுக்கலாம் என்று பக்காவாக திட்டம்போட்டு எடுப்பார்.
இந்த மேடையில் இருக்கிற கலைப்புலி எஸ். தாணுவை வியந்து பார்க்கிறேன். 1980 முதல் அவர் இயங்கி வருகிறார். எத்தனைபேர் இப்படி தொடர்ந்து படம் எடுக்கிறார்கள். அவருக்குள் ஒரு இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர் இருக்கிறார். அதனால்தான், ஒரு படத்தை அவர் ரசித்து எடுக்கிறார்.
எடிட்டர் லெனின் பல விழாக்களுக்கு வருவது இல்லை. அவர் இந்த விழாவுக்கு வர வேண்டும். அவரை பார்க்க வேண்டும் என்று ரொம்பவே விரும்பினேன். அவரை சந்தித்து மகிழ்ச்சி. ஒரு கட்டத்தில் படம் பண்ண ஆசைப்பட்டேன். அந்த சமயத்தில் சென்னை ஏவி.எம் ஸ்டூடியோவில் அவரை பார்த்தேன். படம் எப்ப ஆரம்பிக்குறீங்க என்று கேட்டார். சார் பணம் இல்லை என்றேன். அவரோ, படம் பண்ண பணம் எதுக்கு, நல்ல கதை போதும் என்று உற்சாகம் கொடுத்தார். சினிமாவில் 50 ஆண்டுகளாக பாடல் எழுதி வரும் முத்துலிங்கம் இங்கே வந்து இருக்கிறார். அவரை வீட்டுக்கு போய் வாழ்த்த வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த விழாவில் பேசிய ஒரு பெண், என் அம்மா எனக்கு ரசிகை என்றார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த அம்மா மாதிரி ஏகப்பட்ட ரசிகைகள் எனக்கு இருக்கிறார்கள். அவரால் நான் நன்றாக இருக்கிறேன். அவர்கள் அன்புக்கு நன்றி ’’ என்றார்