தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் (2023) முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. ஆர்.என். ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறிய ஆளுநர் தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்கும்போதே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள், “எங்கள் நாடு தமிழ்நாடு… தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க…” என்றும் முழக்கம் எழுப்பினர். பின்னர் அதிமுகவை தவிர காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழ் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏகள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், தமிழ்நாடு அரசு தயார் செய்து கொடுத்த உரையில் உள்ள 65-வது பத்தியை வாசிக்க மறுத்துவிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். அப்போது முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவை மரியாதை இல்லாமல் ஒரு எதிர்க்கட்சி போல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். இதனால், தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு தேசிய கீதம் பாடாமலும் வெளியே ஆளுநர் சென்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இருந்து பல்வேறு கட்சிகள் தரப்பில் இருந்து கண்டனங்கள் கிளம்பியுள்ளது. தொடர்ந்து டுவிட்டரில் கோஅவுட்ரவி #GetOutRavi என்ற ஹேஷ்டேகும் டிரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர், அரசு தயார் செய்து கொடுத்த உரையில் உள்ள 65-வது பத்தியை வாசிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதில், * சமூகநீ்தி * சுயமரியாதை * அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம் * பெண்ணுரிமை * மதநல்லிணக்கம் * பல்லுயிர் ஓம்புதல் * பெரியார் * அண்ணல் அம்பேத்கர் * பெருந்தலைவர் காமராசர் * பேரறிஞர் அண்ணா * முத்தமிழறிஞர் கலைஞர் * திராவிட மாடல் ஆட்சி * தமிழ்நாடு அமைதிப் பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் வாசிக்க மறுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரை அழைத்து அவமதித்துவிட்டனர் – வானதி சீனிவாசன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பேட்டியளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘திமுக அரசு ஒரு கேவலமான நாடகத்தை இன்று அரங்கேற்றி உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டுள்ளது. திமுக நினைப்பதை ஆளுநர் பேசவில்லை என்பதற்காக தமிழக சட்டசபைக்கு ஆளுநரை அழைத்து அவமதித்துள்ளனர். ஆளுநர் உரையை கூட அவரிடம் பேசி ஒப்புதல் வாங்காமல் இருப்பது உறவு பேணாத நிலையையே காட்டுகிறது. நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டத்தை அரசு பொது வெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது. ஆளுநரை வைத்து தங்கள் சித்தாந்த்தை புகழ்பாட வைக்க முடியாது” என்றார்.
தேசிய கீதத்திற்கு அவமதிப்பு – ஆளுநர், அதிமுக செயல் குறித்து தங்கம் தென்னரசு பேட்டி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “சட்டப்பேரவை மரபுகளுக்கு முரணான வகையில் ஆளுநர் உரையை வாசித்துள்ளார் என்பதால்தான் முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதியே முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று ஆளுநர் உரையின் வரைவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 7ஆம் தேதி அவர் ஒப்புதல் அளித்தார். அப்படியிருக்கும் சூழலில் அவர் இன்று படித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், சமத்துவத்துகாக போராடிய மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக் கூட ஆளுநர் சொல்ல மறுத்துள்ளார். சமூக நீதி, சமத்துவம், பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, மத நல்லிணக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய வார்த்தைகளை அவர் தவிர்த்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் வெளியேறியது, தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். தேசிய கீதம் வாசிப்பதற்கு முன்பாக அதிமுக வெளியேறியது தவறானது” என்று குறிப்பிட்டார்.