கணவன் மனைவி லிஜோமோல், ஹரி கிருஷ்ணன் இருவரும் சென்னையில் வசித்து வருகிறார்கள். அப்பாவி பெண்ணாக கணவன் மட்டுமே உலகம் என்று வாழ்கிறார் லிஜோமோல், ஒரு கட்டத்தில் கணவரை பற்றிய உண்மை தெரிய வரும் போது அவர் எடுக்கும் விஸ்வரூபம்தான் படம்.
அமைதியான திரைக்கதையாக தொடங்கி ஆர்ப்பரிக்கும் வேகத்தில் படம் செல்வதுதான் படத்தின் பலம். லிஜோ மோல் போல அப்பாவியாக பல குடும்பங்களில் பெண்கள் இருக்கிறார்கள். அவரின் அமைதியான முகமும் அதற்கு பின்னால் இருக்கும் ஆக்ரோஷமும் தெரிய வரும் இடத்தில் திடுக்கிட வைக்கிறது. அப்படியொரு நடிப்பு.
தன் தோளில் முழு படத்தையும் தூக்கி சுமந்து செல்கிறார். அதுவும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எந்த சலனமும் அவர் முகத்தில் காட்டாமல் நடித்திருக்கும் நடிப்பு புதிது. போலீஸ் விசாரணையிலும் அவர்களை டீல் பண்ணும் விதமும் ரசிக்க வைக்கிறது. ஹரி கிருஷ்ணன் மனைவியை ரசிக்கும் இடமும், லாஸ்லியாவிடம் உருகும் இடமும் அருமை. நான்ஸி, இன்ஸ்பெக்டர் சபலிஸ் எஸ்.பி. போன்ற கேரகடர்கள் கதைக்கு பலம் சேர்க்கின்றன.
திரைக்கதியில் சுவாரஸ்யங்கள் படத்தை வேகமாக எடுத்துச் செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு என்ன நடக்கும் என்கிற பதைப்பை ஏற்படுத்துகிறார் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன்.
அவருக்கு பெரிதும் கைகொடுத்திருப்பது கோவிந்த வசந்தாவின் இசை. பல இடங்களில் மவுனமாகவே கடப்பது காட்சியின் திகிலை காட்டுகிறது. க்ளைமேக்ஸ் முடிவது வரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து முடித்திருப்பது திகில்.
குற்றத்திற்கு தண்டனை கொலையா என்றும், ஒரு மாவட்ட எஸ்.பி. காணாமல் போவதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளுமா காவல்துறை என்றெல்லாம் லாஜிக் பார்க்காமல் படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சுவார்ஸ்யமாக இருக்கும். வித்தியாசமான கதைக்காக விட்டுக்கொடுக்கலாம்.