நோயல் நடேசன்
மேற்கு நாட்டினர் ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றி, 500 வருடங்களுக்கும் மேலாக அவர்களை அடிமைகளாக நடத்திய காலனி ஆதிக்கம் நமக்குத் தெரிந்தவையே. இலங்கை, இந்தியாவில் பிரித்தானியர் செய்ததுபோல், ஒல்லாந்தார்கள் இந்தோனிசியாவை தங்கள் காலனியாக பல நூறு வருடங்கள் வைத்திருந்தார்கள். ஆங்கிலேயர், மலேசியாவையும் வைத்திருந்தார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் ஓல்லாந்தர் போர்னியோத் தீவின் முக்கால் பகுதியை இந்தோனிசியாவிற்கும், ஆங்கிலேயர் தங்கள் வசமிருந்த சபா, சரவாக் பகுதிகளை மலேசியாவிற்கும் கொடுத்தார்கள்.
போர்னியோத் தீவில் வாழ்ந்த உள்ளுர்வாசிகள் தங்கள் கோபத்தைக் காட்ட அங்குள்ள ஒரு குரங்கு இனத்திற்கு பறக்கும் டச்சு மனிதன் எனப் பெயர் வைத்தார்கள். சிவப்பு நிறத்தில் நீளமான மூக்குடன் இருந்ததால் அக்காலத்தில் தங்களை காலனியாக வைத்திருந்த டச்சுக்காரரை நினைவு கூர்ந்து, ‘பறக்கும் டச்சு மனிதன்‘ ( Flying Dutch Man) என்றது பிற்காலத்தில் பிரபலமாகிவிட்டது!
இந்தக் குரங்குகள் பெரிய உடல், பானை போன்ற பெரிய வயிறு, மிகவும் நீளமான மூக்கு, நீளமான வால் என விசேட இயல்புகளை கொண்டதுடன் மற்றைய குரங்குகளிலிருந்து உருவத்தில் மட்டுமல்ல நடத்தையிலும் தனித்தன்மை கொண்டவை.
‘பறக்கும் டச்சு மனிதன்’ எனக் கூறப்படும் நீளமான சிவப்பு உரோமங்கள் உடலெங்கும் கொண்ட குரங்கும், நீளமான மூக்குள்ள புரபோசிஸ் குரங்கும் போர்னியோவுக்கும் மட்டுமே உரியது.
இப்படியான விசேடமான குரங்குகளைப் பார்ப்பதற்காகச் சாபாவிலுள்ள முக்கியமான நதியாகிய கினபாட்டங்கன் (Kinabatangan River) அருகே உள்ள வனக்குடிசையில் இந்த வருடம் இரு நாட்கள் தங்கி இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடங்களில் ஹோட்டல் அளவு வசதிகள் இல்லாதபோதும் கட்டில், மலசலக்கூடம், வெந்நீர் வசதிகள் கொண்டது. ஆற்றின் அருகாமையில் அமைந்தது. இரு நாட்கள் காலையும் மாலையும் அந்த ஆற்றில் அமைதியான, ஆழமான நீரை சிறிய யந்திர படகுகளில் கிழித்தபடி போவது மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுத்தது. பல இடங்களில் நதியின் இரு பக்கமும் உயர்ந்த மரங்கள் சூரிய ஒளியைக் கீழே விடாது நதிமேல் கல்யாணப் பந்தல் போட்டிருந்தன. ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள உயரமான அந்த மரங்களில் மந்திகள், பறவைகள், தரையில் முதலைகள் என உயிர்ப்பான ஒரு உலகத்தை எமக்குப் பார்க்க முடிந்தது.
மலேசியாவின் இரண்டாவது நீளமான கினபாட்டங்கன் நதி 560 கிலோ மீட்டர் நீளமானது. சபா மாகாணத்தில் மேற்கு பகுதியில் சான்டகன் (Sandakan) என்ற பகுதியில் ஓடுகிறது. இந்த காடுகளில் உச்சி கிளையில் ஓரங்குட்டான் குடிசை அமைத்து வசிப்பதைப் பார்த்தோம். நடுக் கிளைகளில் இந்த புரபோசிஸ் குரங்குகள் குறைந்தது ஐந்து, ஆறு பெண் குரங்குகளுடன் ராஜாங்கம் நடத்தும் அரிய காட்சியையும் பார்க்க முடிந்தது.
எங்கள் கண்ணெதிரே ஆண் குரங்கு கலவியில் ஈடுபடுவதையும், பெண் குரங்கு குட்டிக்குப் பாலூட்டுவதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேவேளையில் கீழ்க் கிளையில் வெள்ளி நிற சிறிய குரங்குள் ஏறி விளையாடின.
புரபோசிஸ் குரங்குகள் மற்றைய குரங்குகளை விட உடலமைப்பில் பெரிதானது என்பதுடன் பல விதத்தில் வேறுபடும். இவைகளில் பிரதானமாக வெளித்தெரியும் பானை வயிறு மற்றைய குரங்குகள்போல் சாதாரணமான ஒரு இரைப்பையில்லை. ஆடு, மாடுகள் போல் நான்கு இரைப்பை அறைகளைக் கொண்டது. இங்கு பக்ரீயாக்கள் தொழில்பட்டு கடினமான இலைகளை உடைத்து சுலபமாக சிறு குடலில் உறிஞ்சும் பொருளாக மாற்றி அதன் இறுதியில் சமிபாடு நடக்கும். இப்படியான அமைப்பின் காரணம், கோடைகாலத்தில் உணவுக்குப் பழங்கள் கிடைக்காதபோது ஆடு மாடுகள் போல் முற்றிய இலைகளைத் தின்று உயிர் வாழ்வதற்கான இசைவாக்கமாகும்.
ஆடு, மாடுகளுக்கு நீரழிவு வியாதி ஏற்படுவதில்லை. இந்த இசைவாக்கத்தால் இந்த புறபோசிஸ் குரங்குகளுக்கு ஏற்படும் தீமை, வாழைப்பழம், மாம்பழம் போன்ற அதிக மாப்பொருள் உள்ள பழங்களைத் உண்டால் வயிற்றில் வாயு உருவாகி அதனால் அவதியுறுவதுடன், பிற்காலத்தில் நீரழிவு நோய் உருவாகவும் வாய்ப்புள்ளது. இதனால் மனிதர்கள்போல் குறைந்த அளவு பழங்களையே இவை உண்ணவேண்டும்.
ஆண் குரங்குகள் 25-30 கிலோவும், பெண் குரங்கு அதில் அரைவாசி உடல் நிறையுடனும் இருக்கின்றன. ஆணின் மூக்கு கிட்டத்தட்ட நான்கு அங்குலம் நீளமானது. இந்த நீளமான மூக்கு அவைகளுக்கு பெண் குரங்குகளை நோக்கி ஒலி எழுப்ப ஏதுவாகிறது. மூக்கின் மூலம் எழுப்பும் ஒலி அதிர்வை உருவாக்கும். ஏற்கனவே சொல்லியபடி ஆண் குரங்குகள் பல பெண்களை தனக்காக வைத்திருக்கும். அத்துடன் இடம் பெயரும்போதோ, உணவு தேடும்போதுஎல்லாம் ஒன்றாகச் செல்லும். இதைவிட போர்னியோவில் உள்ள சில்வர் நிற குரங்கோடு (Silver hair monkey) இணைந்து கலப்பு பிறப்பு உண்டாகியதாக வழிகாட்டி கூறினார். ஒரு விதத்தில் ஆண்மைக்கு உதாரணமாக மூக்கில் மட்டுமல்ல தொழிலும் இந்த புறபோசில் குரங்கள் தங்கள் பெயரை நிலைநாட்டியுள்ளன.
நதிக்கரையில் வசிப்பதால் இவை இலகுவாக நீந்திக் கடந்து செல்லும். வேகமாக நீந்துவதற்கு ஏற்ப காலில் உள்ள விரல்கள் சவ்வுகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
மற்றைய நாடுகளின் விலங்கியல் பூங்காக்களில் புறபோசிஸ் குரங்குகளை வைத்திருக்க முயற்சிகள் எடுத்த முயற்சிகள் அவற்றின் உணவுப் பழக்கத்தால் பெருமளவில் அது கைகூடவில்லை. ஆனதால் அவை போர்னியோவில் மட்டுமே வாழ முடியும். தற்போது புறபோசிஸ் குரங்குகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
கினபாட்டங்கன் நதியின் மூலப்பகுதியில் போர்னியோவுக்கே உரித்தான பிக்மி யானையைப் பார்க்கலாம் என்ற காரணத்தாலும் நாங்கள் சென்றோம். அவை அங்கே நதியைக் கடப்பது வழக்கம் என்ற காரணத்தினால். ஆனால், எங்கள் துரதிஸ்டம் அன்று அவை வரவில்லை. தற்போது அந்தப் பகுதியில் காடு அழிக்கப்பட்டு செம்பனை தோட்டங்கள் இருந்தன. செம்பனைகளை மீண்டும் அழியவிட்டு காடாக்க அரசின் உத்தேசமிட்டுள்ளது என வழிகாட்டி சொன்னார்.
அதிக மக்கள் குடியேறாத இடமானதால் இந்த கினபாட்டங்கன் நதி அழகான இயற்கை சூழலை பேணுகிறது. நதிக்கரையில் முதலைகள் படுத்து உறங்கியபடியும், நகர்ந்தபடியிருந்தன. இதை விட முக்கியமாக நதியோரத்து மரங்களில் கழுகுகள், மீன் கொத்திகள், இருவாச்சி எனப் பல பறவைகளையும் கிளைகளில் கண்டோம். ஏராளமான குரங்குகள் நதிக்கரையிலிருந்து இருபக்கமும் பக்கம் போவதற்று மரங்களிடையே நூலேணிகள் கட்டப்பட்டிருந்தன.
தொடரும்