No menu items!

விசிகவில் விரிசலா? –திருமா, ஆதவ் அர்ஜுனா தனித்தனி அறிக்கை

விசிகவில் விரிசலா? –திருமா, ஆதவ் அர்ஜுனா தனித்தனி அறிக்கை

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசிகவின் தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் எதிரும் புதிருமாக அமைந்துள்ளன.

இந்த விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக தாக்கி ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட, அரசைத் தாக்காமல் ஆலோசனை மட்டும் சொல்லும் விதத்தில் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது X வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கொளுத்தும் வெயிலில் சுமார் 10 லட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும்போது, அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன் காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். இந்த நிகழ்வில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒழுங்கு படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது. அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் முடியாத முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.

இவ்வளவு மக்கள் திரளும்போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது.

எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் ‘விமானப்படை நாளைக்’ கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் – மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை இந்த சாகச நிகழ்வை நடத்தியுள்ளது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழக அரசும் இணைந்து மேற்கொண்டன. இதுதொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால் லட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர். இந்நிலையில்தான், ஐந்து பேர் பலியாகும் அவலம் நடந்துள்ளது. இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது.

தமிழக அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா? என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5 பேர் உயிரிழப்புக்கு தமிழக அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாததே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூற, வெயிலின் கடுமையே இறப்புக்கு காரணம் என்று திருமாவளவன் கூறியிருப்பது, இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்த் தொடங்கியிருப்பதை காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...