ட்விட்டர் தளத்தில் புளூ டிக்கிற்கு கட்டண செலுத்தும் முறை வரும் 29-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ட்விட்டர் தளத்தை வாங்கியுள்ள எலன் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள், அதற்காக இனி இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் செலுத்தவேண்டும் என்று அவர் அறிவித்திருந்தார். கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த சூழலில், புளூ டிக் கட்டண சேவை வரும் 29-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு சொந்த வீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் தாய் அமைச்சர் சேகர் பாபுவிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,561-ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,561 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.79 சதவிகிதமாக உள்ளது.
தமிழகத்தில் வரும் 20-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் நவம்பர் 20 ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் (நவ.16) முதல் நவ.20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.