கவுண்டமணி கதைநாயகனாக நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா பட பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் இன்று நடந்தது. சாய்ராஜகோபால் இயக்கும் இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். யோகிபாபு முக்கியமான வேடத்தில் வருகிறார். சென்னையில் நடந்த விழாவில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் கவுண்டமணி பேசியது ‘‘என்ன பேசுறதுனு தெரியலை. ஏன்னா, எல்லாரும் இந்த படம் பற்றி பேசிட்டாங்க. ரவிராஜா, கோவைராஜன் ஆகியோர் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்வகையில் இந்த படத்தை தயாரிச்சு இருக்கிறாங்க. படத்தை பாருங்க. இயக்குனர் சாய்ராஜகோபால் நன்றாக உழைத்து எடுத்து இ ருக்கிறார். காமெடியாக படத்தை எடுத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்துக்கொண்டே இருக்கலாம். இந்த விழாவுக்கு இயக்குனர் பி.வாசு வந்திருக்கிறார். அவரின் 24 படங்களில் நான் நடித்து இருக்கிறேன். இயக்குனர் கே.பாக்யராஜூம் நானும் ஒரு காலத்தில் ரூம்மெட். அவர் படங்களை பற்றி சொல்லி தெரிய வேண்டியவில்லை. அவருக்கும் நன்றி. சித்தார்த் விபின் அருமையான பாடல் கொடுத்து இருக்கிறார். என்னுடன் நடித்த நடிகர், நடிகைகளுக்கு நன்றி. விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி. விழாவுக்கு வந்த ரசிகர்கள், வராத ரசிகர்கள், வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள், அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றி. ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பாருங்க, நன்றாக பாருங்க. திரும்பவும் பாருங்க. திரும்ப, திரும்பவும் சொல்கிறேன் படத்தை பாருங்கள். ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்க. நன்றி, வணக்கம், வெல்கம், தாங்க் யூ. ஸாரி, மறந்திட்டேன். கேமராமேன் காத்தவராயன் எல்லாருக்கும் தெரியும்படி வெளிச்சமாக படமெடுத்து இருக்கிறார். அவருக்கும், ஆர்ட் டைரக்டர், எடிட்டருக்கும் நன்றி. இன்னமும் இன்டு, இடுக்கு, சந்து, பொந்துவில் ரசிகர்கள் இருந்தால் அவர்களுக்கும் நன்றி. ரயில், பஸ்சில் போகும் ரசிகர்கள், ஹெலிகாப்டரில் போகும், பிளைட்டில் போகும் ரசிகர்களுக்கும் நன்றி’ என்றார்
விழாவில் பேசிய இயக்குனர் பி.வாசு ‘நானும், கவுண்டமணியும் இணைந்து 24 படங்களில் வேலை செய்துள்ளோம். அதில் 20 படங்கள் வெற்றி. குறிப்பாக, மன்னன் போன்ற படங்களில் அவர் காமெடிக்கு யூனிட்டே விழுந்து, விழுந்து சிரிக்கும். தமிழ் தெரியாத கேமராமேன் அசோக்குமார் கூட சிரிப்பார். சில சீன்களில் சிரிப்பை அடக்க முடியாமல் ரஜினிகாந்த் தவித்து இருப்பார்.
கவுண்டமணிக்கு அந்த காலத்தில் டிரைவர் கிடையாது, அவரே வண்டி ஓட்டிக்கொண்டு வருவார். அவருக்கு மானேஜர் கிடையாது. அவர் டைரியில் கால்ஷீட் குறித்து எழுதி வைக்கமாட்டார். தனது மனதில் அவருக்கு இந்த தேதிகள், இந்த படத்துக்கு இந்த தேதிகள் என பக்காக பிளான் பண்ணி, சரியாக வருவார். தயாரிப்பார்,இயக்குனருக்கு ஆதரவாக இருப்பார். இசையமைக்கும்முன்பே கவுண்டமணி நடித்த காட்சிகளை பார்த்து அதிகமாக சிரித்து ரசிப்பார் இசையமைப்பாளர் இளையராஜா’ என்றார்
இயக்குனர் கே.பாக்யராஜ் பேசுகையில் ‘‘சினிமாவுக்கு வருவதற்குமுன்பு, எனக்கு சினிமா சான்ஸ் கிடைக்குமா என என்னிடம் அடிக்கடி கவுண்டமணி கேட்பார். ராசி பலன் பார்த்து சொல்லுங்க என்பார். ஆரம்பத்தில் நான்தான் இயக்குனர் பாரதிராஜாவிடம் போராடி, கவுண்டமணிக்கு சினிமா வாய்ப்பு வாங்கிக்கொடுத்தேன். அன்றைய தினம் 12 மணிவரை போராடி அவர் அனுமதி வாங்கினேன். எனக்காக தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் வாசலில் அவர் காத்திருந்தார். நான் வந்து விஷயத்தை சொன்னேன். உடனே, கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டோம்.