மாமல்லபுரத்தில் தனியார் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், ஐந்து ரதங்கள் சிற்ப பகுதியில், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழும கைவினைப் பொருட்கள் வணிக வளாகம் மற்றும் சுற்றுலா வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு ஏழுமலை என்பவர் காவலாளியாக உள்ளார். கடந்த 20-ம் தேதி மாலை 3:30 மணிக்கு, ஐந்து ரதங்கள் சிற்ப வளாகத்தை நோக்கிச் சென்ற காரை மறித்த ஏழுமலை, காரை, ‘பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தும்படி கூறியுள்ளார்.
ஆனால் காரில் வந்தவர்கள் செக்யூரிட்டி பேசுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் விலகி நிற்குமாறு சத்தம்போட ஆரம்பித்தனர். இருப்பினும் காருக்கு வழிவிடாமல் செக்யூரிட்டி மறித்துக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அவர்கள் காரை மோதுவது போல் இடித்துக் கொண்டு காரை முன்னோக்கி செலுத்த ஆரம்பித்தனர். இதனால் கோபமடைந்த செக்யூரிட்டி ஏழுமலை, காரில் இருந்தவர்களைப் பார்த்து தகாத வார்த்தையால் பேசியதாகத் தெரிகிறது.
காரில் வந்தவர்கள் ஆத்திரமடைந்து, ஏழுமலை வைத்திருந்த பிளாஸ்டிக் குழாயை பறித்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரம், சமூக வலைதளங்கள் வாயிலாக நேற்று முன்தினம் மாமல்லபுரம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு காவலாளியிடம் தகராறில் ஈடுபட்ட முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபு இன்பதாஸ், 41, அவரது மனைவி கீர்த்தனா, 29, மறைமலை நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி ஷண்முகபிரியா, 38, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.
இவர்களில் பிரபு இன்பதாஸ், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொதுச்செயலராக உள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், குன்னுார் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடையே பேசிய கைதானவர்கள், “தனியார் பாதுகாவலர்தான் எங்களை மதுபோதையில் தரக்குறைவாக பேசினார், அந்த காட்சியை யாரும் வெளியிடவில்லை. முழுமையான ஃபுட்டேஜை பார்க்கவும். ஏன் சோஷியல் மீடியாக்கள் இப்படி செயல்படுகின்றன என எங்களுக்கு புரியவில்லை” எனக்கூறினர்.