காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான திருமகன் காலமானதை அடுத்து சமீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிபெற்றார்.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மீண்டும் உயர்வு: இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கொரோனா
இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்து கடந்த 19ஆம் தேதி ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரே நாளில் 1,071 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. ஆனால், மறுநாள் 918 ஆகவும், நேற்று 646 ஆகவும் பாதிப்பு குறைந்த நிலையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 280 பேர், குஜராத்தில் 176 பேர், கேரளா மற்றும் கர்நாடகத்தில் தலா 113 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 662 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 467 உயர்ந்துள்ளது. அதாவது இன்று காலை நிலவரப்படி 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், சத்தீஷ்கரில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று கடைசி ஒரு நாள் கிரிக்கெட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
இன்றைய ஆட்டத்தின் வெற்றி தொடரை வெல்வதற்கு மட்டுமல்ல, தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைப்பதற்கும் அவசியமாகும். அதே நேரம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணியினர் அதற்கு பதிலடியாக ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர். சென்னையில் 3¼ ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி அரங்கேறுவதால் ரசிகர்களும் போட்டியை காண ஆர்வமுடன் உள்ளனர்.
பாகிஸ்தானை குலுக்கிய நிலநடுக்கம்: 9 பேர் உயிரிழப்பு என தகவல்
பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின. பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் இரண்டு பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், 160 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதெசத்தில் இரவு ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இரவு நேரத்திலும் வெளியில் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.