மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர்.
அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலைமைத் தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தின் மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். அண்மையில்தான் சிபி – சிஐடி டிஜிபி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் தமிழகத்தின் மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரின் தோடா பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 6 கி.மீ., தொலைவில் உருவான இந்த நிலநடுக்கமானது தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு அறிவியல் ஆய்வு மையம் அதன் ட்விட்டர் பக்கத்தில், “5.4 ரிக்டர் அளவில், ஜூன் 13-ம் தேதி பிற்பகல் 1.30 அளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் உணரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.