அமெரிக்காவில் தனது ஆட்சிக்காலத்தில் செயல்திறன் துறைக்கு தொழில் அதிபர் எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்குவர் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் எலன் மஸ்க். உலகின் நம்பர் 1 பணக்காரரான எலன் மஸ்க், பல்வேறு கூட்டங்களில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக பேசினார். அவரது எக்ஸ் வலைதளமும் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தனது ஆதரவாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், எலன் மஸ்கின் சேவையை பெரிதாக பாராட்டி பேசினார். அவரது சேவையை தனது அரசு பயன்படுத்திக்கொள்ளும் என்றும் கூறியிருந்தார். இந்த சூழலில் தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவர் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், “மகத்தான எலான் மஸ்க்கும் அமெரிக்க நாட்டின் மீது பற்று கொண்ட விவேக் ராமசாமியும் கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த இரண்டு அமெரிக்கர்களும் இணைந்து எனது ஆட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான விதிமுறைகளை தளர்த்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார்கள். இது ‘Save America’-வுக்கு மிகவும் அவசியம். இது நிச்சயம் அரசு நீதியை வீணடிப்பவர்களுக்கு அதிர்வலைகளை தரும். ஜூலை 4, 2026 வரை அவர்கள் இந்த பொறுப்பில் தொடர்வார்கள்” என தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதவியை ஏற்பதன் மூலம் அமெரிக்க அரசியலில் எலன் மஸ்க் நேரடியாக கால் பதிக்கிறார்.
செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை, வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும், வெள்ளை மாளிகை, மேலாண்மை அலுவலகம் மற்றும் பட்ஜெட் போன்ற விவகாரங்களில் இந்த துறை பங்கு கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த விவேக் ராமசாமி?
எலன் மஸ்க்குடன் சேர்ந்து இந்த துறையை நிர்வகிக்கப் போகும் விவேக் ராமசாமி, இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் கேரளாவை சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
விவேக் ராமசாமியின் தந்தை பெயர் கணபதி ராமசாமி. இவர் கொல்கத்தாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் படித்து இன்ஜினியராக பணியாற்றினார். அதன்பிறகு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். விவேக் ராமசாமியின் தாய் பெயர் கீதா. இவர் மைசூர் மருத்துவுக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பை முடித்து சைக்கார்ட்டிஸ்டாக பணியாற்றினார். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியில் வசித்து வந்தனர். அதன்பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
விவேக் ராமசாமி 1985ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓஹியோவின் சின்சினாட்டி சிட்டியில் பிறந்தார். இந்து மதம் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக விவேக் ராமசாமி உள்ளார். தற்போது அவர் ஓஹியோவை தலைமையிடமாக கொண்ட பயோ டெக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார். அந்த கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார். ஆனால் கடைசி நேரத்தில் டொனால்ட் டிரம்ப்புக்காக போட்டியில் இருந்து விலகினார். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் வெற்றிக்காக கடினமாக உழைத்தார்.