ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது சீராக உள்ளது. மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
என் வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது – திமுக எம்.பி., திருச்சி சிவா
திருச்சி மாநகராட்சி எஸ்.பி.ஐ. காலனியில் திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய இறகுப்பந்து விளையாட்டு மைதான திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழா அழைப்பிதழ் மற்றும் பேனர்களில், திருச்சி சிவா எம்.பி. பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என். நேருவின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் திடீரென காரில் இருந்து இறங்கி சிவா எம்.பி. வீட்டின் சுற்றுச்சுவரில் இருந்த முகப்பு மின் விளக்குகளை அடித்து நொறுக்கினர். மேலும், திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக்கை அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான தனது வீட்டை திருச்சி சிவா இன்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “நடந்த செய்திகளை நான் ஊடங்கள் வாயிலாகவும் சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். என்னைவிட என் கட்சி முக்கியம் என்பதால் பலவற்றை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. தனிமனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவம் அடிப்படையில் வளர்ந்தவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனை தந்துள்ளது. வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.
கன்னியாகுமரி முதல் மகாபலிபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம்
சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்று இ.சி.ஆர். எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுமா என்று பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. தலைவர் வைகோ எம்.பி. மற்றும் தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை இந்த கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும், என்றார்.
மேலும், “கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக ரூ. 24 ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளும் நடந்து வருகிறது. விரிவாக்கத்தின்போது பாலங்கள், இணைப்பு சாலைகள், வாகன சுரங்க பாதைகள் போன்றவை அமைக்கப்படும். இப்பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும்” என்றும் தெரிவித்தார்.
சக மாணவியை கர்ப்பிணி ஆக்கிய 15 வயது சிறுவன்: விபரீதமான குரூப் ஸ்டடி
சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அரசு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின.
மாணவியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன், சிறுமி வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது மாணவிக்கும் அந்த மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருமே 10-ம் வகுப்பு படிப்பதால் பாடம் தொடர்பான சந்தேகம் கேட்பதற்காக அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதனால் பெற்றோர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர்களது பழக்கம் நாளடைவில் எல்லை மீறி போனது. இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பம் ஆனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அம்மாபேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் கர்ப்பத்தை கலைப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் பெற்றோர் மற்றும் டாக்டர்கள், குழந்தை நல அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.