கேரள – கர்நாடக எல்லையை ஒட்டிய மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கிறார் மலாத்தி (பியானா மொமின் ) என்ற மலேசிய பெண். அவரது கணவர் சவுரப் சச்தேவா (குரியச்சன்).
மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் ரகம் இவர். ஊருக்குள் அவரை பற்றி பெண்பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் மலாத்திக்கு துணையாக பியூஷ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞனை குரியச்சன் வேலைக்கு வைத்துள்ளார்.
அந்தக் காட்டுக்கு மோகன் போத்தன் ( வினித்) ஒரு நாயுடன் வருகிறார். மலாத்தியையும், அவரது கணவர் குரியச்சனையும் விசாரித்து விட்டு, கூடாரம் அமைத்து தங்கியுள்ளார். வினித் இறக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்களும், ஒவ்வொன்றாக அவிழும் முடிச்சுகளுமே ‘எகோ’ (Eko) திரைக்கதை.
ஏற்கெனவே பிரபலமான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். அவரது திரை எழுத்தாளரும், ஒளிப்பதிவாளருமான பாகுல் ரமேஷ் கூட்டணி இம்முறையும் காட்சியமைப்புகளில் கட்டிபோட்டுள்ளனர்.
கிஷ்கிந்தாவில் குரங்குகளை வைத்து மிரட்டியவர்கள், ‘எகோ’வில் நாய்களை வைத்து நம்மை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.
அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றை விற்கும் குரியச்சன், மலேசியாவிலிருந்து மலாத்தியை கேரளத்துக்கு அழைத்து வந்தது எப்படி என்பது வித்தியாசமான ஃப்ளாஷ்பேக்.
உண்மை ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரின் கோணமும் வெவ்வேறானது. அந்த ஃப்ளாஷ்பேக் குரியச்சன் பார்வையில் ஒரு கருத்தும், குரியச்சன் நண்பர் வினித் விவரிக்கும்போது வேறு மாதிரியாகவும் வெளியாகிறது.
‘ஃபேலிமி’ படத்தில் சாதுவாக தோன்றிய சந்தீப், ‘ஆலப்பூலா ஜிம்கானா’, ‘படக்கலம்’ படங்களுக்கு பிறகு நிறைவான, ஆக்ரோஷமான நடிப்பை இப்படத்திலும் உறுதி செய்கிறார்.
நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவும் இப்படத்தின் அடிப்படை. மனிதர்கள் நாய்களையும், உறவுகளையும் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருப்பதுதான் அடிநாதம். பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்து, அடிமையாக வைத்திருப்பதையும் காட்சியாக விவரிப்பது சிலிர்ப்பு.
“நில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளிதான்” என்பதை சுற்றிதான் வருகிறது க்ளைமாக்ஸ். மனிதன் தன் விருப்பத்துக்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.



