அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மத்திய உயர் கல்வித் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசிய உயர் கல்விக்கான தரவரிசைப் பட்டியலில், பெருவாரியாக இடம்பெற்றுள்ளவை தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள். கல்வி என்பதுதான் யாராலும் திருட முடியாத, பறிக்க முடியாத சொத்து. எனவேதான், படிப்பிற்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால்தான் திராவிட மாடல் தமிழக அரசானது, கல்விக் கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முழுமுதற் கொள்கையான சமூகநீதியின் அடிப்படையே கல்விதான்.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் கல்லூரி உயர் கல்வி, அனைவருக்கும் கல்லூரி ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது” என்று கூறினார்.
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் 2ஆவது இடத்தில் இந்தியா: பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். தொடர்ந்து, இன்று நடைபெற்ற, தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து விழா பேரூரை நிகழ்த்திய பிரதமர் மோடி, “இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா 2ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக அளவில் வாய்ப்புகளை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது. தொழில்முனைவோர் அதிகளவில் உருவாகி வருகின்றனர். அரசு தொழில்முனைவோராக விரும்புவர்களுக்கு செவி சாய்க்கிறது, உதவுகிறது;.சூழலுக்கேற்ப முடிவுகளை எடுக்கவும், படிப்புகளை தேர்வு செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உதவுகிறது” என கூறினார்.
நுழைவுத் தேர்வு ரத்தால் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை உயர்ந்தது: அமைச்சர் பொன்முடி பேச்சு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதல் இடம். 53 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகின்றனர். அதிலும் தற்போது ஆண்களைவிட பெண்களே அதிகம் பயில்கின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில்கூட பதக்கம் பெறுபவர்களில் பெண்களே அதிகம். பதக்கம் பெறும் 69 பேரில் 39 பெண்கள், 30 ஆண்கள். இதுதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிற மாற்றம், வளர்ச்சி.
கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதனால், 25 ஆயிரமாக இருந்த கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 77 ஆயிரமாக உயர்ந்தது” என்று கூறினார்.
முதலமைச்சருக்கும் அரசுக்கும் பாஜகவின் பாராட்டுகள்: அண்ணாமலை பேட்டி
இந்திய பிரதமர் மோடி நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தபின், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழர்களின் 5,000 ஆண்டு பாரம்பரியத்தை ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தமிழக அரசு உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக தமிழர்களின் தொன்மை, பாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மிகம் உள்ளிட்டவை உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்தவகையில் இது மிகவும் அற்புதமான நிகழ்ச்சி; பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி. ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை மிக அற்புதமாக நிகழ்த்திய தமிழ்நாடு அரசுக்கு பாஜக சார்பில் பாராட்டுகள் மற்றும் நன்றிகள். ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன். ஆளுநர் மாளிகையில் பிரதமருடன் பாஜகவினருக்கு நடைபெற்ற சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை” என்று கூறினார்.
எச்சரிக்கை: சென்னையில் மெட்ராஸ் ஐ பரவுகிறது
சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது; மருத்துவமனைகளில் தினமும் குறைந்தது 50 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, “கண் விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று காரணமாகத்தான் மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. இது காற்று மூலமாகவும் மாசு வாயிலாகவும் பரவுகிறது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து போதல், நீர் சுரந்து கொண்டே இருந்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்தல் ஆகியவை ‘மெட்ராஸ் ஐ’இன் முக்கிய அறிகுறி. வெளியே நடமாடும் போது கண் கூச்சமாக இருக்கும். மெட்ராஸ் ஐ பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கைகுட்டை போன்ற பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால் தொற்று வரும். குணப்படுத்தக்கூடிய சாதாரண தொற்று தான். முதலிலேயே உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.