ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதேபோல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி., மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ, மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்கிறார்கள். இதற்கான அதிகார பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 12-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நொறுங்கிய மருத்துவமனைக்குள் தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி விட்டது. சீட்டு கட்டுகள் போல் பொல, பொலவென சரிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்தோர், என்ன நடந்தது என தெரியாமலேயே உயிரை இழந்தனர். இதனை விட சோகம் ஒன்றுமறியா குழந்தைகள் பலியான பரிதாபம் தான். அவர்களில் பலரும் பெற்றோரின் அரவணைப்புக்குள் இறந்து கிடந்த காட்சிகள் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்நிலையில், சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் மருத்துவமனை ஒன்று இடிந்து விட்டதாகவும், நோயாளிகள் பலரும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பதாகவும் மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. உடனே மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். நவீன கருவிகள் மூலம் உயிரோடு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் குழுவினர் முதலில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து ரத்தம் சொட்டுவதை கண்டனர். உடனே அந்த பகுதியில் இருந்த இடிபாடுகளை நீக்கி அதன் அடியில் யாராவது இருக்கிறார்களா? என்று மீட்பு குழுவினர் பார்த்தனர். அங்கு இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரை மெதுவாக வெளியே எடுத்த போது அவரது அருகே பச்சிளங்குழந்தை ஒன்று லேசான காயங்களுடன் முனங்கி கொண்டிருப்பதை கண்டனர். அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் தாயோடு இணைந்தே இருந்தது. இதனை கண்ட மீட்பு குழுவினர் ஒரு வினாடி அதிர்ந்து போனார்கள். அடுத்த வினாடி சுதாரித்து கொண்டு அந்த பச்சிளங்குழந்தையை கைகளில் அள்ளி எடுத்து மார்போடு அணைத்தப்படி வெளியே மீட்டு வந்தனர். தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளங்குழந்தை தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி உயர்கிறது: மீண்டும் ரெப்போ வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை அறிவித்தார். இதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமாக ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு 5 முறையாக ரெப்போ வட்டி விகிதம் 2.25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மேலும் உயர்கிறது.
பழனி கோவில் கருவறையில் அமைச்சர் நுழைந்ததாக குற்றச்சாட்டு: பிராயச்சித்த கும்பாபிஷேகம் கோரும் வானதி சீனிவாசன்
பழனி கோயில் குடமுழுக்குக்கு முந்தைய நாள், ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்கு சென்ற அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அதிகாரிகளுடன் கருவறைக்குள் நுழைந்தார் என்றும் இதனால், மீண்டும் பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகா கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள், இந்து சமய அறநிலையளத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களும், துறை அதிகாரிகளும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இது அப்பட்டமான ஆகம மீறல். அது மட்டுமல்ல, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். எனவே, இதற்காக, அமைச்சர் முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.