துருக்கி – சிரிய எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 38,000 பேர் உட்பட என இருநாடுகளிலும் இதுவரை 46,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தப் பூகம்பத்தின் பாதிப்பில் இருந்து இருநாட்டு மக்களும் மீண்டு வராத நிலையில், சில மணிநேரங்கள் முன்னர் மீண்டும் துருக்கி – சிரிய எல்லையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய அன்டக்யாவில் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு துருக்கிய மீட்பு படைகள் விரைந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று மாலை இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூர் பகுதியில் ரிக்டர் அலகில் 3.6 என்ற அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டது. அதேபோல் சில மணிநேரங்கள் முன்பு ஜம்மு காஷ்மீரின் கட்ரா பகுதியில் ரிக்டர் அலகில் 3.4 என்ற அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியிலும் ரிக்டர் அலகில் 3.6 என்ற அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனாலும் வாக்களர்களுக்கு பணம் விநியோகிப்பது தொடர்கிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கைகளை எடுப்பது இல்லை. எனவே, தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று (பிப்.21) விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, ஷிண்டே அணியினருக்கு சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைவர் ராகுல் ஷெவாலே எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த மக்களவை செயலகம், நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவசேனா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட அறை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.