சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை டாக்டர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்ன நினைக்கிறார்கள்?
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவரும் எழுத்தாளருமான சிவபாலன், ‘டாக்டர். பாலாஜி அவர்கள் மிகவும் நேர்மையான மருத்துவர். ஓமாந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அவர் பணி புரிந்தபோது, அங்கு அவர் மட்டுமே ஒரே ஒரு Medical Oncologist. சரியாக காலை 8 மணிக்கு வந்துவிடுவார், மாலை செல்வதற்குள் நூறு நோயாளிகள் வரை பார்த்திருப்பார். ஒரே நாளில் எண்பதில் இருந்து நூறு நோயாளிகள் அதுவும் Oncologyஇல் பார்ப்பது அத்தனை எளிதானதல்ல. ஒரே ஒரு மருத்துவர் என்பதால் விடுப்பும் எடுக்க மாட்டார், அத்தனை பொறுப்பான மருத்துவர்.
மருத்துவ துறையில் சமீபகாலமாக மிகவும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த குறையை மூடி மறைக்க அரசு மருத்துவர்கள் மீதே நடவடிக்கை எடுத்து கவனத்தை திருப்பி விடுகிறது. மக்களும் இதை அறியாமல் மருத்துவர்கள் மீது வன்முறையில் இறங்குகிறார்கள்.
தமிழக மருத்துவத்துறையின் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி எச்சரிக்கையாக இந்த சம்பவத்தை பார்க்க வேண்டும். சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு மருத்துவத்துறையின் போதாமைகளை சரி செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமனுஜம் எழுதியுள்ள முகநூல் பதிவில், “பொதுமக்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு பொறுப்பற்ற நிர்வாகம் முக்கிய காரணம். போக்குவரத்துத்துறை நிர்வாகம் செய்யும் தவறுகளால் பொதுமக்களுக்கும் கண்டக்டர்களுக்கும் சண்டை வருவது போன்றதுதான் இதுவும்.
கடும் ஆட்பற்றாக்குறை. அதிகரித்து வரும் நோயர்களுக்கு ஏற்ப பணியாளர்களை நியமிப்பதில்லை. பல்வேறு பணியாளர்களும் தனியார் ஏஜென்ஸிகள் மூலம் அவுட்சோர்ஸிங் முறையில் எடுக்கப்படுகிறார்கள். இருக்கும் காலியிடங்களை முதுநிலை படிப்பு படிக்கும் / படித்து முடித்த மாணவர்களைக் கொண்டு தற்காலிகமாக நிரப்புகிறார்கள்.
ஒரு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் நடக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஐந்து மகப்பேறு மருத்துவர்கள், ஐந்து குழந்தைகள் மருத்துவர்கள், ஐந்து மயக்க மருத்துவராவது இருக்க வேண்டும். இது குறைந்தபட்ச தேவைதான். ஆனால், பல இடங்களில் இரண்டு, மூன்று பேரை வைத்து 24 மணி நேர ட்யூட்டி பார்க்க வைக்கிறது. இது ஓர் உதாரணம்தான்.