தனுஷ் தனது படவரிசையைப் பக்காவாக வைத்து கொண்டிருக்கிறார். அவர் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இதற்குப் பிறகு அவர் தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு ‘குபேரா’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு வியாபாரத்தையும், சந்தையையும் உருவாக்க ஆசைப்படுவதால், தனுஷ் தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்.
அதேபோல் தெலுங்கில் எளிதில் மக்களிடையே போய் படம் சேரவேண்டுமென்பதற்காக, அங்குள்ள மூத்த கதாநாயகர்களில் ஒருவரை இனி தனது படங்களில் நடிக்க வைப்பது என தனுஷ் முடிவு செய்திருக்கிறாராம். இதனால் குபேராவில் நாகார்ஜூனாவும் நடிக்கவிருக்கிறார்.
அந்தவகையில்தான் இப்போது ‘குபேரா’ படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்போது குபேரா கதை இதுதான் என்று ஒரு ஒன்லைன் கசிந்திருக்கிறது.
ஒரு பரம பிச்சைக்காரன். ஒரு பெரிய கோடீஸ்வரன். இவர்கள் இருவருக்குமான உறவு என்னவாகிறது என்பதுதான் அந்த ஒன் லைன்.
என்னடா இது விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படக்கதையைப் போலவே இருக்கிற்தே என்று யோசித்தால் தப்பில்லை. ஆனால் திரைக்கதையை கையாண்டிருக்கும் விதம் ஒரு பக்காவான கமர்ஷியல் படமாகவும், பிச்சைக்காரனுக்கு இதற்கும் சம்பந்தமில்லாமலும் இருக்கிறதாம்.
தனுஷூக்கு இதில் இரட்டை வேடம். அதில் ஒருவர் கேங்க்ஸ்டராக இருக்கலாம் என்று யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.
குறையும் மவுசு… கலக்கத்தில் சந்தானம்
முன்பெல்லாம் சந்தானத்தின் கால்ஷீட்டை வாங்கிய பிறகே படம் தொடர்பான மற்ற விஷயங்கள், கதாநாயகி யார், தொழில்நுட்ப வல்லுநர்கள் யார் யார், எப்போது ஷூட்டிங் என்பதையெல்லாம் திட்டமிடுவார்கள். அந்தளவிற்கு சந்தானத்திற்கு டிமாண்ட் இருந்தது.
பல தமிழ்ப்படங்களில் ஏறக்குறைய இரண்டாவது கதாநாயகனைப் போல் நடித்து வந்த சந்தானத்திற்கு, அப்போது இருந்த மவுசு இப்போது இல்லை. காரணம் அவர் ஹீரோவாகதான நடிப்பேன் என்று தீர்க்கமாக முடிவெடுத்து இருப்பதுதான்.
அவர் கதாநாயகனாக நடித்தப் படங்களில் இரண்டு மூன்று படங்கள் மட்டுமே வசூலை அள்ளிக் கொடுத்திருக்கின்றன. மற்றப்படங்கள் அந்தளவிற்கு வசூலைத் தரவில்லை. இருந்தாலும் எப்படியாவது ஒரு படம் சந்தானத்திற்கு வந்துவிடுகிறது.
இப்படியொரு சூழலில் வெளிவந்தப் படம்தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த போதே சர்ச்சைக்குள்ளானது. ‘ஊருக்குள்ள கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு திரியுற ராமசாமிதானே நீ’ என்ற வசனம் கொந்தளிப்பை உருவாக்கியது.
இந்த பஞ்சாயத்தாலேயே படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட ரெட்ஜெயண்ட் மூவிஸ் பின்வாங்கி விட்டது. ஆனால் பிறகு அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த வாக்கிற்காக உதவி செய்ய படம் வெளியானது.
படம் வெளியாவதற்கு முன்பாக இதன் தொலைக்காட்சி உரிமை, ஒடிடி உரிமை பற்றிய வியாபாரம் நடந்தது. அதன் படி தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும், ஒடிடி-யை அமேசான் ப்ரைமும் வாங்குவதாக முடிவானது.
ஆனால் இடையில் இந்த சர்ச்சையினால் கலைஞர் தொலைக்காட்சி, படம் திரையரங்குகளில் வெளியான பின்பு படத்திற்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்து வாங்கிக்கொள்கிறோம் என்று ஒரு தொகையை முடிவு செய்ததாம்.
இதனால் கொஞ்சம் அதிர்ச்சியுற்ற ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தயாரிப்பு, பிறகு ஒப்புக்கொண்டதாம். படம் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையினால் இப்படி ஒப்புக்கொண்டார்களாம்.
இந்நிலையில் படம் வெளியானது, பெரிய வரவேற்பு இல்லை. இதனால் தொலைக்காட்சி உரிமை வியாபாரத்தை சீக்கிரமே முடிக்க திட்டமிட, அதற்குள் ஒடிடி-யில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆக அரம்பித்துவிட்டது.
இதனால் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னும் வியாபாரம் ஆகாமல் அப்படியே இருக்கிறதாம். இதை நம்பி ஒரு வருமானம் இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு தலையில் பானையைப் போட்டு உடைத்தது போல இருக்கிறதாம்.



