1960-களின் கனவுக் கன்னி. பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றி இளைஞர்களின், பெண்களின் கவனத்தை ஈர்த்தவர் தேவிகா.
தேவிகாவின் முன்னோர் சித்தூரைச் சேர்ந்தவர்கள். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் பிரமிளா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்தான். ‘ரேசுக்கா’ என்ற தெலுங்கு படத்தில் என்.டி.ஆர் ஜோடியாக அறிமுகமானார் பிரமிளா. இதைத்தொடர்ந்து முக்தா சீனிவாசன் இயக்கத்தில் எஸ்.எஸ்.ஆர் நாயகனாக நடித்த ‘முதலாளி’ படத்தில் நாயகியாக நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் வேணுதான் பிரமிளா என்ற அவரது பெயரை தேவிகா என்று மாற்றினார்.
முதலாளி படம் ஹிட் ஆனதும் தேவிகா பிஸியானார். எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி, என முன்னணி நடிகர்களின் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தேவிகா பிசியான நடிகையாக இருந்த நேரத்தில் அவரைப்பற்றி பல கிசுகிசுக்கள் வந்தன. சிவாஜிக்கும் தேவிகாவுக்கும் காதல், கண்ணதாசனுடன் தேவிகாவுக்கு தொடர்பு என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டார்.
இந்தச் செய்திகளைப் படித்து டென்ஷனான தேவிகாவின் அம்மா, அவரைக் கண்டித்தார். ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு வரவேண்டும், எந்த நடிகருடனும் பேசக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்தார். அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தபோது, அவரது தோழி ஒருவர் அவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லியிருக்கிறார்.
இதனால் அவசரமாக ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் தேவிகா. திருமணம் செய்துகொள்ள அவர் தேர்ந்தெடுத்த நபர் இயக்குநர் பீம்சிங்கின் உதவியாளர்களில் ஒருவரான எஸ்.எஸ். தேவதாஸ். அந்த யூனிட்டில் தேவதாஸ் மிகவும் அமைதியானவர் என்பதால் தேவிகாவுக்கு அவரைப் பிடித்துப் போனது. ஒருநாள் படப்பிடிப்பில் தேவதாஸை தனியாக அழைத்த தேவிகா, அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த தேவதாஸ், “மேடம் நீங்க பெரிய சினிமா ஸ்டார். ரொம்ப பிசியா இருக்கிற நடிகை. உங்களுக்கும் எனக்கும் எப்படி பார்த்தாலும் பொருத்தமில்லை. உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு போய் வேலையைப் பாருங்கள்” என்றார் ஆனால் மீண்டும் மீண்டும் தேவிகா கேட்க, அவர் திருமணத்துக்கு சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு கனகா என்ற மகள் பிறந்தார்.
தேவிகாவுடனான தனது திருமண வாழ்க்கையைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறிய தேவதாஸ், “திருமணத்துக்கு பிறகு உதவி இயக்குனராக இருந்த நான் ஒரு சொந்த கம்பெனி ஆரம்பித்து, ‘வெகுளிப் பெண்’ என்ற படத்தை கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்தேன். அந்த படத்திற்கு 1972-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
அடுத்து ஒரு தெலுங்கு படம் எடுத்தேன். சிங்கப்பூர் நண்பர்களோடு சேர்ந்து எடுத்த அந்த படம் வெற்றி பெறவில்லை. சிங்கப்பூர் நண்பர்கள் முழு நஷ்டத்தையும் என் தலையில் போட்டு விட்டார்கள். இந்த நஷ்டத்தால் எனக்கும் தேவிகாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. விவாகரத்து கேட்டு தேவிகா வழக்கு தொடர்ந்தார். ஆனால் விவாகரத்து வழக்கில் தேவிகா தொடர்ந்து ஆஜராகாததால் வழக்கு தள்ளுபடி ஆனது. இப்படி தானும் குழம்பி என்னையும் கஷ்டப்படுத்திய தேவிகா 2001-ல் காலமானார்” என்கிறார்.
இந்த திருமணத்தைப் பற்றி ஒரு பேட்டியில் சென்ன தேவிகா, “ 20 ஆண்டுகளில் நான் திரையுலக வாழ்வில் வெற்றியின் உச்சத்துக்கு போனேன். ஆனால் குடும்ப வாழ்க்கை சிக்கல்களினால் எனது திரைப்படத் தொழில் தொடர்புகள் பாதிக்கப் பட்டன. அதனால் மனம் வேதனை அடைந்தது. உடல்நிலை மோசமானது.
இதையெல்லாம் நடிப்பினால் மறக்கலாம் என்று பார்த்தால் உடல் பெருத்து போய் விட்ட காரணத்தால் சினிமா வாய்ப்புகள் குறைந்தன. அதனால் மேலும் மன வேதனை அதிகமானது” என்றார்.