No menu items!

மக்கள் மகிழ்ச்சி வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மக்கள் மகிழ்ச்சி வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘ஊரக வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். நியாய விலைக்கடைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரமான மருத்துவ சேவையை எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சமமான வளர்ச்சியே சமூக நீதியும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கும்.

பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வளர்ச்சி தீர்மானிக்கப்படாது. மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சி ஆகியவற்றை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் 1-2 வயதான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை என்று இருந்தது. தற்போது 3 முட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கோத்தபயவை தொடர்ந்து பசில் ராஜபக்சேவும் இலங்கை திரும்பினார்

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இதே போல் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சேவும் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். இந்த நிலையில் தற்போது இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் முடிந்து அமைதி நிலவி வருவதால் கோத்தபய ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சொந்த நாடு திரும்பினார். இவரை தொடர்ந்து தற்போது பசில் ராஜபக்சேவும் நேற்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பினார். அவர் தங்கியுள்ள இடத்தில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

டிரம்பின் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம்: எலான் மஸ்க் நடவடிக்கை

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் அவரது கணக்கை முடக்கின. இதில் டுவிட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்த தடை விதித்தது.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், டிரம்பை டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கலாமா? வேண்டாமா? என டுவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். சுமார் ஒன்றரை கோடி பேர் இதில் பங்கேற்று வாக்களித்த நிலையில் 51.8 சதவீதம் பேர் டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எலான் மஸ்க் நேற்று நீக்கினார். இதனையடுத்து டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

மலேசியாவில் தொங்கு நாடாளுமன்றம்: சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்த மகாதீர்

மலேசிய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தம் 222 இடங்கள் உள்ளன. தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் காலமானதை அடுத்து 220 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 111 இடங்கள் தேவைப்படும். ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் தாம் போட்டியிட்ட தொகுதியில் தேர்தல் வைப்புத் தொகையை இழந்து படுதோல்வி கண்டுள்ளார்.  24 ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்துள்ளார். எனினும் இம்முறை அவருக்கு 4,566 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மகாதீரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்கத்தான் கூட்டணி வேட்பாளர் 25,463 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற டாக்டர் மகாதீர், வைப்புத்தொகையை இழந்தார்.

ஆட்சி அமைய முயன்று வரும் தரப்பினர் முயன்று வரும் நிலையில், இன்று மாலைக்குள் மலேசிய மாமன்னரிடம் எம்பிக்களின் ஆதரவுப் பட்டியலை அளிக்க வேண்டும் என அரண்மனை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...