தமிழக அரசைக் கண்டித்து வரும் 9, 13 மற்றும் 14-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 9-ம் தேதி பேரூராட்சி, 13-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி, 14-ம் தேதி ஒன்றியங்களில் அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கழகங்களோடு இணைந்து, சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
41.52 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு – அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
தமிழகத்தில் நேற்று (டிச.1) வரை 41.52 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 3.77 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 3.01 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 41.52 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.” என்று கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. நினைவு மணிமண்டபம் திறப்பு
கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து கோவில்பட்டி மணிமண்டபத்தில் உள்ள கி.ரா. சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் மகாலெட்சுமி சந்திரன், சப்-கலெக்டர் மகாலெட்சுமி மற்றும் கி.ரா.வின் மகன்கள் திவாகரன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமடுக்கப்பட்டுள்ளார்.
பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் இன்று வர்ணனையின் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமடுக்கப்பட்டுள்ளார்.