வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த, நடிகர் டேனியல் பாலாஜி கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி மாரடைப்பால் திடீரென காலமானார். அவரின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் நடித்த ‘ ஆர் பி எம் ’ படத்தின் டிரைலர் வெளியானது. இது, டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம். இதில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். கோடையில் படம் வெளியாக உள்ளது. சென்னையில் நடந்த இந்த பட டிரைலர் வெளியீட்டுவிழாவில் டேனியல் பாலாஜியின் தாயார் திருமதி. ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாடகி கல்பனா ராகவேந்தர் இந்த படத்தை வெளியிடுகிறார்.
நிகழ்ச்சியில் கல்பனா ராகவேந்தர் பேசுகையில், ‘‘‘இந்த படத்துக்காக டேனியல் பாலாஜியை காணொளி மூலம் சந்தித்தேன். அந்த சந்திப்பில் ‘‘உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகியாக சந்தித்திருக்கிறேன்’’ என்றார். அந்த சந்திப்பின்போது, ‘நான் விரும்பும் பாடலை பாடுவீர்களா?’ என்றும் கேட்டார். ‘‘நீங்கள் விரும்பும் பாடலைக் கேளுங்கள். அதை தெரிந்தால் கண்டிப்பாக உடனடியாக பாடுகிறேன்’’ என்றேன் ‘தண்ணீர் தண்ணீர் ‘ எனும் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் பி. சுசிலா அம்மா பாடிய ‘கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே.’ என்ற பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டார்’’. ஆனால், ‘‘ அந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் போதிய பயிற்சி இல்லாததால் அந்தத் தருணத்தில் பாட இயலாததற்கு மன்னிக்கவும்’’ எனக் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு பயிற்சி பெற்று அந்த பாடலை நேரில் வந்து பாடுகிறேன் என்றும் சொன்னேன். அடுத்து ‘’சிங்கார வேலனே’ என்ற பாடலை பாட இயலுமா!’’ என கேட்டார். அந்தப் பாடலை உடனடியாக அந்த காணொளி மூலமாக பாடி காண்பித்தேன். அவர் மிகுந்த திறமைசாலி. ஆனாலும் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதற்கு அவருடைய கண்கள் பிளஸ்ஸாக இருக்கும் . இந்த படத்தில் அவர் நடிப்பு அருமையாக இருக்கும். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எளிமையாக இருந்தார். பின்னர், அவர் கேட்ட விருப்பமான பாடலை பயிற்சி பெற்று பாடி, அதனை வாய்ஸ் மெசேஜாக அனுப்பினேன். ’’ என்றார்
டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி பேசுகையில், ” டேனியல் பாலாஜி க்கு குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே ரொம்ப பக்தி. ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது தேங்காய் பழம் பூ என பொருளை வாங்கிட்டு நடந்து வருவான். பஸ்ஸில் வரமாட்டான். காலேஜ் சென்ற பிறகும் அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான். அவன் நடிச்ச படம் இது . இதனை எல்லாரும் பார்த்து அவனை ஆசீர்வதிக்க வேண்டும்.