விக்ரம் பிரபுவுக்கு திருப்பு முனை
சிறுவயதில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் எனும் வேட்கையோடு அறிவு,காவல்துறை களப் பயிற்சி முகாமிற்கு வருகிறார் விக்ரம் பிரபு. அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கவே, மேலதிகாரியின் கோபத்திற்கு உள்ளாகி பல இன்னல்களை சந்திக்கிறார். அவற்றை எதிர்கொண்டு அவர் போலீஸ் ஆகிறாரா இல்லையா கதை. தமிழ் சினிமா பல விதமான போலீஸ் கதைகளைக் கண்டிருக்கிறது. ஆனால் போலீஸ் ஆக ஒருவன் எவ்வளவு சிரமப்படுகிறான் என்பதை இப்படத்தில் முதன் முறை யாக விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள்.
காவல் அதிகாரியாக இருந்து நடிகரான தமிழ், இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அழுத்தமாக கால் பதித்திருக்கிறார்.
ஓர் இடத்தில் தினமும் ஒரு காவலர் காவலுக்கு நிற்கிறார். அவர் அந்த இடத்தில் காவலராக நிற்பதற்கு அபத்தமான ஒரு காரணம் இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தில் நடப்பட்ட மரக்கன்றை பாதுகாக்க மேலதிகாரி ஒருவர் காவலர் ஒருவரை அங்கு காவல் காக்க சொல்லியிருக்கிறார். அதையே அவர் பின் வந்தவர்களும் காரணமே தெரியாமல் தொடர்ந்து காவலுக்கு நிற்கிறார்கள். மரக்கன்று வளர்ந்து மரமாகிவிட்டது, காவல் காக்க சொன்ன அதிகாரியும் ஓய்வு பெற்று வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இன்றும் யாரோ ஒரு காவலர் அதே இடத்தில் நின்று காவல் காக்கிறார்.
நம் சிஸ்டமும் இப்படிதான் என்று அந்த ஒரு சீன் வழியே முழுப் படத்தின் கருவையும் நம்மிடம் எளிமையாகக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார் இயக்குனர்.
படம் முழுக்க ஒரு மைதானத்தில்தான் நடக்கிறது. ஆனால் சலிப்பு இல்லை. காரணம் மைதான காட்சிகளை காட்சிப்படுத்திய விதம். ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் பாராட்டுக்குரியவர்.
ஜிப்ரானின் பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. ஆனால் பாடல்கள் மனதில் தங்கும்படி இல்லை. வசனங்கள் சில நச்சென்று இருக்கின்றன.
நடிகர்களின் தேர்வை பாராட்ட வேண்டும். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அறிவாக வரும் விக்ரம் பிரபுவின் கடின உழைப்பையும், மெனக்கெடலையும் படத்தில் நம்மால் காண முடிகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு திருப்பு முனை தரும் ஒரு கதாபாத்திரம். சிறப்பாக செய்திருக்கிறார்.
ஈஸ்வர மூர்த்தியாக லால். அவர் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். செல்லக்கன்னுவாக எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு மிக இயல்பு. முத்துப்பாண்டியாக மதுசூதன் ராவும் மிரட்டுகிறார்.
ஃப்ளாஷ் பேக்கில் சின்ன கதாபாத்திரத்தில் வரும் லிவிங்ஸ்டன் நடிப்பும் நேர்த்தி. போஸ் வெங்கட், பாவேல் நவகீதனின் நடிப்பும் நன்று.
நாயகியாக வரும் அஞ்சலி நாயர். சிறப்பான நடிப்புதான் ஆனாலும் அவர் கதைக்கு தேவையா என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கிறது.
இரண்டாம் பாதியில் யூகிக்கூடிய வகையில் திரைக்கதை நகர்வது படத்தின் பலவீனம். காட்சி அமைப்புகளில் செயற்கை தன்மை எட்டிப் பார்க்கிறது. அதனால் லாலின் காட்சிகள் பலவீனமாக தெரிகின்றன. ஆனால் முதல் பாதியின் வலுவான காட்சி அமைப்புகள் படத்தை நகர்த்தி விடுகின்றன.
சிஸ்டம் சரியில்லை என்று எல்லோரும் ஒதுங்கி விட்டால், அந்த சிஸ்டத்தை எப்படி மாற்றி அமைப்பது?
அதிகாரத்தை கைப்பற்றி அந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதுதான் தீர்வு என்று இயக்குனர் தமிழ் டாணாக்காரன் மூலம் ஆழமாகவும் அழகாகவும் பதிவு செய்திருக்கிறார்.