‘ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் அதற்குக் கூடுதல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது. இதனாலே, பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னும் மழை அதிகம் பெய்தது” என்று பாம்பே ஐஐடி பேராசிரியர் ரகு முர்துகுடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேராசிரியர் ரகு முர்துகுடே எழுதியுள்ள ஆங்கியுஅல் கட்டுரையில் விளக்கமாக தெரிவித்துள்ளார். சுழியல் எழுத்தாளர் நாராயணி சுப்ரமணியன் மொழிபெயர்த்துள்ள அக்கட்டுரை இங்கே…
“2024இல் எதுவுமே வழக்கமானதாக இருக்கவில்லை. 2023இன் தொடர்ச்சியாக பல முக்கியத் தலைப்புச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. உச்சபட்ச வெப்பம், தீவிர எல்-நினோ, தொடர்ச்சியான தீவிர பருவகால நிகழ்வுகள் என பல நாட்கள் தொடர்ந்து புதிய செய்திகள் வந்தன.
2024ஆம் ஆண்டிலும் வெப்பம் தொடரும் என்று முதலிலேயே எதிர்பார்க்கப்பட்டது; அதே நேரம் இது லா நினா ஆண்டாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. 2023இல் எல்-நினோ வரும் என்ற கணிப்பை விரைவாகவே வெற்றிகரமாக முன்வைத்துவிட்டார்கள் என்பதால், 2024இல் தீவிரமான லா-நினா இருக்கும் என்ற கணிப்பும் வெற்றிகரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வானிலை ஆய்வாளர்களிடையே நிலவியது. ஆனால், அது தவறாகிப் போனது. வெப்பமண்டல கிழக்கு பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலைகள் விநோதமானவையாக மாறின. பூமத்திய ரேகைக்கு அருகில் எதிர்பார்த்த அளவு வெப்பநிலை குறையவில்லை. அந்தப் பட்டைக்கு வடக்கே கொஞ்சம் வெப்பநிலை அதிகரிக்கவும் செய்தது. இது ஒரு குழப்பமான சூழல்.
வடக்கு இந்தியப் பெருங்கடலில் நிலவிய பருவமழை சுழற்சியையும் குழப்பமானது என்று சொல்லலாம். வடகிழக்குப் பருவமழை மட்டுல்லாது பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழையையும் சென்னை எதிர்கொண்டது. ஆனால், வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை இந்தியாவின் பிற பகுதிகள், குறிப்பாக தீபகற்பப் பகுதியில் வழக்கத்தைவிட குறைவான மழையே இருந்தது.
இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) உருவாகும் என்ற கணிப்பும் இருந்தது, அதுவும் வரவில்லை. வழக்கமாக இயற்கை நமது கணிப்புகளைத் தவிடுபொடியாக்கும். இந்த ஆண்டும் (2024) அதுவே நிகழ்ந்தது. ஆனால், இப்போது ஆராய்ச்சியாளர்களும் சட்டத்தை உருவாக்குபவர்களும் புதிய புதிர்களை எதிர்கொள்கிறார்கள்.
நவம்பர் 14ஆம் தேதி கிழக்கு இந்தியப் பெருங்கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக உருவான ஃபெஞ்சல், அப்படியே இருந்தது. 10 நாட்களுக்குப் பிறகுதான் வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இன்னொரு வாரம் மெதுவாக நகர்ந்தபிறகுதான் இந்திய வானிலை ஆய்வு மையம் அதை ஒரு புயலாக அறிவித்து பெயர் கொடுத்தது.
தென்மேற்குப் பருவமழை முடிந்த காலகட்டத்திலிருந்தே வடக்கு இந்தியப் பெருங்கடலில் வெப்பம் நிலவியது. ஒரு லா நினா காலகட்டத்தின்போது இந்த வெப்பநிலை மேலும் பல புயல்களை உருவாக்கியிருக்கவேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.
ஃபெஞ்சலாக உருவான புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கி திடீரென்று திரும்பி மீண்டும் தள்ளாடியபடியே மேற்கு நோக்கி வந்தது. பின்னணியில் வடகிழக்கு காற்று மற்றும் மேற்கு நோக்கிய காற்று ஆகியவை வீசிக்கொண்டிருந்ததே இதற்குக் காரணம். வங்காள விரிகுடாவில் நிலவிய வெப்பம் ஃபெஞ்சலை மெதுவாக நகர அனுமதித்தது. கரையைக் கடந்தபின்பு நனைந்த கடற்கரை மணலில் இருந்து ஆற்றல் கிடைத்தது. ஆகவே விரைவில் வலுவிழக்காமல் அது புயலாகவே தொடர்ந்தது.
இந்த முந்தைய மழைப்பொழிவுதான் ஃபெஞ்சலை வழக்கத்தைவிட அதிகமான காலம் வாழவைத்தது, அரபிக்கடலுக்குச் செல்லும்வரைகூட இது உதவியது.
உலகின் பிற பகுதிகளிலும் விநோதத்தன்மை இருந்தது. அமெரிக்காவின் புயல் கணிப்புகளைப் பொறுத்தவரை 2024ஆம் ஆண்டு விநோதமானதாக இருந்தது. வடக்கு அட்லாண்டிக் கடலில் வரலாறு காணாத புயற்காலம் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியின் கோடைகாலம் முழுக்க மந்தநிலையே நிலவியது. தாமதமாகவே புயல்கள் வரத் தொடங்கின.
லா நினாவின்போது அந்தப் பகுதியின் புயல்கள் தீவிரமானவையாக இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்தனர். ஆனால், வெப்பமண்டல பசிபிக் கடலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெப்பநிலை குறையவில்லை. ஆகவே புயற்காலம் குழப்பமானதாக இருந்தது. எதிர்பார்த்ததைவிட காலம் தாழ்த்தியபிறகே உலகளாவிய புயல்களின் எண்ணிக்கை அதிகரித்தன.
வெப்பமான கடல், வலுவற்ற காற்று வேக மாறுபாடு, ஈரப்பதம், கீழடுக்கு சுழற்சிகள் என புயல் உருவாகப் பல காரணிகள் இருந்தும் புயற்காலம் கொஞ்சம் அமைதியாகவே இருந்தது. புயல்களைக் கணிப்பது எவ்வளவு கடினம் என்பதை ஃபெஞ்சல் மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறது.
உலகளாவிய சராசரி வெப்பநிலை கிடுகிடுவென்று அதிகரிக்கும்போது பருவநிலை எந்த அளவுக்குக் குழப்பமானதாக மாறும் என்பதை 2023ஆம் ஆண்டு காட்டியது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெப்பநிலை மாறுபாடுகள் குறைவுதான் என்றாலும் 2024லும் இதுவே தொடர்ந்தது.
புவி வெப்பமயமாதல் பகடையை உருட்டுகிறது. இந்த விளையாட்டில் காலநிலை வல்லுநர்களால் முன்னேற முடியவில்லை. பகடையில் எந்த எண் விழுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்பதையே அவர்களால் சொல்ல முடிகிறது. உறுதியாக எந்த எண்ணையும் கணிக்க முடியவில்லை. 2024ஆம் ஆண்டில் லா நினா வரவில்லை என்பதால் எல்லாம் இயல்புநிலைக்கு வந்துவிடும் என்றும் சொல்ல முடியாது. நமது கணிப்புகளைப் புரட்டிப்போடும் அளவுக்கு எதிர்பாராத ஒரு அம்சம் எங்கோ உருவாகியிருக்கிறது. இது தெளிவாகத் தெரிகிறது.
புவி வெப்பமாதலின் மீது கவனம் செலுத்தவேண்டும். ஆனால், 1.5 டிகிரி செல்சியஸ், 2 டிகிரி செல்சியஸ் ஆகியவை நாம் வைத்த உச்சவரம்புகள்தான். இன்னொரு விஷயம் – வெப்பமாதலைவிடவும் அது எப்படி நிகழ்கிறது என்பதுதான் பருவகாலத்தை அதிகமாக பாதிக்கும். இதுவும் நமக்குத் தெரியும்.
எல் நினோ, லா நினா, மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள வெப்ப உயர்வு, ஆர்டிக் பகுதியில் ஏற்பட்ட பனி இழப்பு ஆகிய எல்லாமே வடக்கு இந்தியப் பெருங்கடலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தெற்குப் பெருங்கடலுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. இதன்மூலம் வெப்பமான நீர் வந்துசெல்லும். புவி வெப்பமாதல் என்பது வழக்கமான காலநிலை மாறுபாடுகளோடு கலக்கும்போது கணிக்கமுடியாத தீவிரமான பருவநிலை அம்சங்கள் எப்படி உருவாகும் என்பதற்கு ஃபெஞ்சல் புயல் ஒரு நல்ல உதாரணம்.
நமது புயற்காலங்கள் விநோதமானவையாக மாறிவிட்டன. ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் அதற்குக் கூடுதல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம்.
2024இல் பருவமழை காலங்களுக்கு இடையில் நிலத்திலிருந்து வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது அரபிக்கடலில் அஸ்னா புயலாக மாறியது. புயல் பற்றிய கணிப்புகள் மிகவும் சவாலானவையாக மாறிவிட்டன என்பதை இது காட்டுகிறது.
நிச்சயமற்ற தன்மைகள் இவ்வளவு இருக்கின்றன என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். உலகளாவிய வெப்பமாதல் மற்றும் சில பகுதிகளில் ஏற்படும் வெப்பமாதல் நிகழ்வுகளை கவனிக்கவேண்டும். இயற்கையான காலநிலை அம்சங்களோடு அவை எப்படி இயங்குகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். இதிலிருந்து இன்னும் நம்பகத்தன்மை கொண்ட கணிப்புகளை இந்தியாவுக்காக உருவாக்க முடியும்” என்று பேராசிரியர் ரகு முர்துகுடே தெரிவித்துள்ளார்.