யார் வம்புக்கும் போகாமால் சர்ச்சையில் சிக்காமல் வெற்றிகரமாக திரை வாழ்க்கையில் முன்னேறி வரும் சிவகார்த்திகேயன், பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடுத்திருக்கிறார், சம்பள பாக்கி தரவில்லை என்று. சம்பள பாக்கி கொஞ்சமல்ல நான்கு கோடி ரூபாய்.
சூர்யா, கார்த்தியை வைத்து பல படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா. சிங்கம், சிறுத்தை, சில்லுனு ஒரு காதல், பருத்தி வீரன், நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும், ஜிவி பிரகாஷை வைத்து டார்லிங், ஆர்யாவை வைத்து டெடி போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார். 2018-ல் சிவகார்த்திகேயனை ஹீரோவாகவும் நயன்தாராவை ஹீரோயினாகவும் நடிக்க வைத்து ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம்தான் இப்போது வழக்கு வரை சென்றுள்ளது.
அந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக 15 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் 11 கோடி மட்டும் கொடுத்ததாகவும் மீதி நான்கு கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயன் புகார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்காக எனக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், 2019 மே மாதம் படம் ரிலீஸ் ஆன பிறகு 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்பட்டது. 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை ஞானவேல் ராஜா இதுவரை தரவில்லை.
11 கோடி ரூபாய்க்கான TDS தொகையை பிடித்தம் செய்த ஞானவேல் ராஜா, வருமான வரித் துறையில் அதைச் செலுத்தாததால், 2019-20, 2020-21-ம் ஆண்டுகளுக்கான TDS தொகை 91 லட்சம் செலுத்த வேண்டுமென எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்.
எனவே, எனது சம்பள பாக்கியான 4 கோடியை வாங்கித் தரவும் என்னிடம் பிடித்தம் செய்த தொகையை வருமான வரித் துறைக்கு செலுத்தவும் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும்.’
மேலும், ஞானவேல் ராஜா தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தலை’, விக்ரம் நடிக்கும் ‘சியான் 61’, மற்றும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’ ஆகிய படங்களை அவர் தயாரிக்கவும் விநியோகம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
இதனை விசாரித்த நீதிபதி எம். சுந்தர் வழக்கை நாளை மறுநாள் விசாரனைக்கு எடுத்துக்கொள்வதாக (31.04.2022) கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.
தயாரிப்பாளர் ஞானவேல் தரப்பில் இது குறித்து விசாரித்தபோது இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிக்கப்படும், சிக்கல் எதுவும் இல்லை என்று கூறினார்கள்.