இந்திய கிரிக்கெட்டுக்கு இன்று புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பதோனி என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்ஸ்வால். 11 வயதில் கிரிக்கெட்டில் சாதிப்பதற்காக சொந்த ஊரில் இருந்து புறப்பட்ட ஜெய்ஸ்வாலின் வாழ்க்கைப் பயணம், இன்று வெஸ்ட் இண்டீஸில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
2013-ம் ஆண்டில் 11 வயது சிறுவனாக கிரிக்கெட் கனவுகளுடன் மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வாலுக்கு, ஆரம்பத்தில் வாழ்க்கை கசப்பாகத்தான் இருந்த்து. முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு சாதாரண டெண்டில்தான் வசித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். பானி பூரி வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். தான் பானி பூரி விற்கும்போது, உடன் பயிற்சி செய்யும் மாணவர்கள் வந்தால் ஒளிந்துகொள்வாராம்.
ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளருக்கு இது தெரியவர, தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியிலேயே தங்கவைத்து அவருக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்துள்ளார். அதிலிருந்து ஜெய்ஸ்வாலுக்கு எல்லாமே ஏறுமுகமாக இருந்துள்ளது.
19 வயதுக்கு உடபட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆடும் இந்திய அணியில் இடம் கிடைக்க, அதிலும் சாதித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து 2020-ல் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடி கொடுத்து ஜெய்ஸ்வாலை வாங்கியிருக்கிறது. வறுமையான வாழ்க்கைச் சூழலில் இருந்து ஒரே நாளில் யுடர்ன் அடித்து செல்வச் செழிப்பில் உயர்ந்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.
2020-ல் ஐபிஎல்லில் அறிமுகமானாலும், அவர் உச்சம் தொட்ட்து 2023 ஐபிஎல் தொடரில்தான். இத்தொடரில் 14 போட்டிகளில் ஆடிய ஜெய்ஸ்வால் மொத்தம் 625 ரன்களைக் குவிக்க, தேர்வாளர்களின் கவனம் இவர் மீது விழுந்த்து. இதோ இப்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் ஜெய்ஸ்வால்.
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு இப்போது மிகப்பெரிய பஞ்சம் இருக்கிறது. முதல் 6 பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட இட்துகை பேட்ஸ்மேன் இல்லை. இது அணியை பாதித்துக்கொண்டிருக்க, அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.