No menu items!

சர்ச்சை – விலையில்லா சைக்கிளில் சாதி குறியீடு!

சர்ச்சை – விலையில்லா சைக்கிளில் சாதி குறியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 40 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகளுக்கு வழங்குவதற்கான சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த சைக்கிள் இருக்கைகளில் எம்.பி.சி, பி.சி. எஸ்.சி என சாக்பீசில் குறியீடு எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம்  2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆறு, குளம், கால்வாய்கள், தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் தீயணைப்பு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

பரப்பன அக்கரகார சிறையில் உள்ள 28 ஈழத் தமிழர்களை விடுதலை செய்க: வைகோ கோரிக்கை

மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள், 38 ஈழத் தமிழர்களிடம் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக்கொண்டு, இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்து, கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏமாற்றி விட்டுவிட்டு சென்று விட்டனர். 10.06.2021 அன்று  அவர்களை கர்நாடக காவல்துறை கைது செய்தது.

இதனையடுத்து தேசிய புலனாய்வுப் பிரிவு இவர்களை விசாரணை செய்து, இவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஏமாற்றப்பட்டவர்கள். எனவே இவர்களை விடுதலை செய்யலாம் என்று 8.9.2021 அன்று அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அதற்கு பின்னரும் 38 ஈழத் தமிழர்கள் பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டனர். அதில் 28 பேர் தற்போது பரப்பன அக்ரகார சிறையிலேயே சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. எனவே, அவர்களை ஒன்றிய அரசு  உடனடியாக விடுதலை செய்து, இலங்கை தூதரகம் மூலம் அவர்கள் தாய் நாடு திரும்ப  ஆவன செய்திட வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மனைவியுடன் தனிமையில் இருக்க நன்னடத்தை கைதிகளுக்கு பஞ்சாப்பில் அனுமதி

பஞ்சாப்பில் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. வருகிற 27-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக பஞ்சாப்பின் நபா நகரில் உள்ள கோயிந்த்வால் மத்திய சிறை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் சிறையில் இந்த நடைமுறையை அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறையில் நீண்ட காலமாக உள்ள நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த பஞ்சாப் சிறைத்துறை அதிகாரி ஒருவர், ‘இந்த சலுகையை பெறும் கைதி தனது கணவருடனோ அல்லது மனைவியுடனோ சிறை வளாகத்தில் குளியலறையுடன் கூடிய தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்கப்படும். இதன்மூலம் அவர்களின் திருமண பந்தமும் அவர்களிடையே பிணைப்பும் அதிகரிக்கும். கைதிகளிடம் ஒழுக்கமும் நன்னடத்தையும் கூடும். இந்த அனுமதி 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். எச்.ஐ.வி. மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவச்சான்றுடன் வரும் மனைவி அல்லது கணவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த சலுகை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத் தப்படுகிறது” என்று கூறினார்.

கனடாவில் இந்தியர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை

கனடா செல்லும் இந்தியர்களுக்கு பயண ஆலோசனையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் கனடாவில் பயணம் செய்யும் போதும் படிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள தூதரகங்களில் பதிவு செய்யுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய உயர் ஆணையரகம் மற்றும் தூதரகங்கள் கனடாவில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்பில் இருப்பதையும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அவர்களை அணுகுவதையும் இது எளிதாக்கும்” என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...